வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/09/2018)

கடைசி தொடர்பு:16:41 (09/09/2018)

போலீஸ் வேனில் இருந்து தவறி விழுந்த பெண் கைதி! - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பண மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பெண் சிறைக் கைதி காவல்துறை வாகனத்தில் ஏறும்போது தவறி விழுந்துள்ளார். பிறகு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கைதி

திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையைச் பகுதியைச் சேர்ந்த சுகிர்தராஜ் என்பவரிடம் கடந்த 2017 ஆண்டு பூந்தோட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் செல்வபாக்கிய செந்தில்குமாரி, உறவினர் அருண் பாக்கியராஜ்குமார், மற்றும் அவரது நண்பர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர் சுப்புலட்சுமி, ஆகியோர் ரூ 23 லட்சம் பண மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 31-ம் தேதி நான்கு பேரும் கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் அவர்களை நீதிபதி சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.  

அதைத் தொடர்ந்து நான்குபேரையும் சிறைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் வேனில் ஏற்றியபோது, சுப்புலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் அதில் சுப்புலட்சுமிக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுப்புலட்சுமியை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று, மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் கண்காணிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.