காதில் ஹெட்ஃபோன், ஸ்லிங் பேகுடன் இந்த இஞ்சினியர் ஏன் பால் கறக்கிறார்? | This modern-day youth does milk business after completing engineering

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (09/09/2018)

கடைசி தொடர்பு:19:21 (10/09/2018)

காதில் ஹெட்ஃபோன், ஸ்லிங் பேகுடன் இந்த இஞ்சினியர் ஏன் பால் கறக்கிறார்?

பால் விற்பனைதான் எனக்கு புரஃபஷன். இந்த உணவகம் எனது பேஷன். எங்க வயல்கள்ல இப்போதைக்கு மாட்டுத் தீவனப் பயிர்களை மட்டும் போட்டிருக்கேன். அந்த நிலத்தில் இயற்கை முறையில் உணவுப் பொருள்களை விளைவிக்கும் திட்டமும் இருக்கு

காதில் ஹெட்ஃபோன், ஸ்லிங் பேகுடன் இந்த இஞ்சினியர் ஏன் பால் கறக்கிறார்?

விவசாயத்தைத் தீவிரமாகத் பார்த்த கடந்த தலைமுறையிடம் யாராவது, 'என்ன செய்றீங்க?' என்று கேட்க நேர்ந்தால்,'சும்மாதான் இருக்கேன்' என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு விவசாயம் பார்ப்பதை வெளியில் சொல்ல கௌரவக் குறைச்சலாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், இப்போது பொறியியல், பட்டப்படிப்புகள் படித்து, பல லட்சம் வரை சம்பளம் தரும் வேலைகளை உதறித் தள்ளிவிட்டு,'நான் விவசாயம் பார்க்க போகிறேன்' என்று தைரியமாக சேற்றில் கால்பதிக்கும் இளையதலைமுறை உருவாகியிருக்கிறது. இதற்குக் காரணம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விதைத்த விழிப்புஉணர்வு விதைதான். கார்த்திகேயனும் அந்த ரகம்தாம். பொறியியல் படிப்பு, கைநிறைய சம்பளம் தந்த வேலை எல்லாவற்றையும் உதறிவிட்டு, இன்று பால் கறந்து வீடு வீடாக விற்பனை செய்கிறார்; இயல் வழி உணவகம் என்ற பெயரில் இயற்கை உணவகத்தையும் நடத்தி வருகிறார்.


 பால் வியாபாரம் செய்யும் கார்த்திகேயன்

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.வெள்ளோட்டைச் சேர்ந்தவர்தான் கார்த்திகேயன். 24 வயது இளைஞரான இவர் காதில் இயர் போன்,ஷாட்ஸ்,டீ ஷர்ட்,லெதர் பேக் சகிதம் நவீன தோற்றத்தோடு பால் கறக்கும், பால் ஊற்றும் பாணியே அலாதியாக இருக்கிறது. லிங்கநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் பால் கறந்து கொண்டிருந்த அவரிடம் விஷயத்தைக் கறந்தோம்.

 "என்னோட குடும்பம் விவசாயக் குடும்பம்தான். 20 ஏக்கர் நிலமிருக்கு. ஆனால்,அத்தனையும் மானாவாரி நிலம். அப்பாவும்,அம்மாவும் அதோட மல்லுக்கட்டி மல்லுக்கட்டி வெறுத்துப் போய், 'இந்தப் பாழாய் போன விவசாயம் எங்களோட போகட்டும்'ன்னு என்னையும்,அக்காவையும் நல்லா படிக்க வச்சாங்க. நானும் ஆர்வமா மெக்கானிக்கல் பொறியியல் படிச்சு 2015 ல் முடிச்சேன். கரூர்ல ஒரு கம்பெனியில நல்ல  சம்பளத்துல வேலை கிடைச்சுச்சு. ஆனா, படிப்பு, அந்த வேலையெல்லாம் எனக்கு அந்நியமா தெரிய ஆரம்பிச்சுச்சு. அப்போதான் நம்மாழ்வார் அய்யாவோடு இருந்து தற்சார்பு, இயற்கை வாழ்வியலை கத்துக்கிட்ட எங்க பெரியம்மா சரோஜா மூலம் எனக்கு விவசாயத்தின் மீது ஈடுபாடு வர ஆரம்பிச்சுச்சு. நம்மாழ்வார் அய்யா விதைத்துப் போன விஷயங்களை தேடித் தேடி தெரிஞ்சுகிட்டேன். புது உத்வேகம் கிடைச்சுச்சு. உடனே, 2016 ஜனவரியில் பால் விற்பனையை வேலை பார்த்துக்கிட்டே தொடங்கினேன். 'ஏன் இந்த வேண்டாத வேலை'ன்னு வீட்டுல திட்டுனாங்க. இன்னும் பலர், 'இன்ஜினியரிங் படிச்சுட்டு இப்படி பால்காரனா மாறினா, உனக்கு யாரும் பொண்ணு தரமாட்டாங்க'ன்னு பீதியக் கிளப்பினாங்க. 'விவசாயத்தைப் பிடிக்கிற பொண்ணு இல்லாமலா போயிடுவாங்க'ன்னு அவங்க வாயை அடைச்சேன். 'பைத்தியக்கார பய'ன்னு இன்னும் சிலர் காதுபட பேசுனாங்க. அதை எல்லாம் மனசுல போட்டு உரமாக்கிகிட்டேன்.


 கார்த்திகேயன் குடும்பம்

பள்ளப்பட்டியில் பால் கடை வச்சேன். அருகில் உள்ள ஈசநத்தம், ஆண்டிப்பட்டி, லிங்கநாயக்கன்பட்டின்னு கிராமங்கள்ல போய் காலையும், மாலையும் பால் கறந்து எடுத்துக்கிட்டு வந்து பள்ளப்பட்டியில வீடு வீடாக விற்பனை செய்தேன். முதல்ல அஞ்சரை லிட்டர் பால்தான் விற்பனை செய்ய முடிஞ்சது. மூணே மாசத்துல அது 100 லிட்டர் அளவுக்கு உயர்ந்துச்சு. அப்போ வேலையை விட்டேன். வீட்டுல உள்ளவங்க என்னோட பேசவே இல்லை. அப்புறம் படிப்படியா பால் விற்பனையை உயர்த்தி இப்போ தினமும் 250 பாலை 200 வீடுகள்ல விற்பனை செய்ற அளவுக்கு வளர்ந்திருக்கேன். 200 லிட்டர்ன்னு வரும்போதே வீட்டுல உள்ளவங்களுக்கு நம்பிக்கை வந்து, எனக்கு உதவ ஆரம்பிச்சாங்க. இதற்கிடையில், எங்கம்மாவுக்கு ஃபேஸ் ஸ்ட்ரோக் இருந்துச்சு. அதற்குக் கரூர்ல உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரம் செலவு செய்து வைத்தியம் பார்த்தோம். ஆனால்,சில மாதங்களிலேயே மறுபடியும் பிரச்னை ஏற்படும். அப்போதான் சிவகாசியில் உணவே மருந்துன்னு வைத்தியம் பார்க்கிற மாறன்ங்கிறவர்கிட்ட அம்மாவுக்கு வைத்தியம் பார்த்தோம். உணவு முறைகளை மாத்தச் சொன்னார். செஞ்சோம். இப்போ அம்மாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.


 சூப்  ரோஸ்மில்க்

அதை மனசுல வச்சுருந்த நான், 'மக்களுக்கு இயற்கை உணவுப் பற்றிய விழிப்புணர்வு தேவை'ன்னு 2016 மே மாதம் பள்ளப்பட்டியில் இயல்வழி உணவகத்தை ஆரம்பிச்சேன். இங்கே சுத்தமான பருத்திப்பால்,நவதானிய பால்,உளுந்தங்கஞ்சின்னு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். சூப் வகைகள்ல,முடக்கத்தான்,முருங்கை கீரை,மணத்ததக்காளி,ஓமவள்ளி இலை சூப்புன்னு தயாரிக்கிறோம். உருண்டை வகைகள்ல நிலக்கடலை, எள், உளுந்து, நவதானியம், கம்பு, ராகு உருண்டைகள் விற்கிறோம். இதைதவிர எஸ்ஸன்ஸ் இல்லாமல் பன்னீர் கொண்டு, பீட்ரூட் மூலம் இயற்கை ரோஸ்மில்க் தயாரிச்சு விற்கிறோம். உளுந்தங்களி, ராகி தோசை, கம்பு பனியாரம், சோள தோசை, சுண்டல், முளைக்கட்டின பயிர்கள், காலையில் பருக அருகம்புல் சாறு,கற்றாழைச் சாறு கொடுக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் மக்கள் யாரும் வரலை. அப்புறம்,'என்னதான் இருக்கு'ன்னு பார்க்க வந்தாங்க. இப்போ ரெகுலரா 70 ல் இருந்து 80 பேர்கள் கடைக்கு வர்றாங்க. ஓரளவு விழிப்புஉணர்வு வந்துட்டுன்னு மகிழ்ச்சியா இருக்கு. எனக்கு அப்பா,அம்மா,அக்கா மூனு பேரும் ஒத்தாசை பண்றாங்க. மாசம் இப்போதைக்கு 15 ஆயிரம் லாபம் கிடைக்குது. பால் விற்பனைதான் எனக்கு புரஃபஷன். இந்த உணவகம் எனது பேஷன். எங்க வயல்கள்ல இப்போதைக்கு மாட்டுத் தீவனப் பயிர்களை மட்டும் போட்டிருக்கேன். அந்த நிலத்தில் இயற்கை முறையில் உணவுப் பொருள்களை விளைவிக்கும் திட்டமும் இருக்கு. வழிகாட்டியா நம்மாழ்வார் இருக்கார். என்னை நம்ப ஆரம்பிச்சுருக்கிற குடும்பம் இருக்கு. நல்ல உணவைத் தேடி வர ஆரம்பிச்சுருக்கிற மக்கள் இருக்காங்க. பொறியியல் படிப்பு தரும் உயரத்தைத் தாண்டி இந்த பால் வியாபாரத்தில் ஜெயிப்பேன் அண்ணே. இது உறுதி" என்றபோது,அவர் கண்களில் தன்னம்பிக்கை மின்னியது..

வாழ்த்துகள் தம்பி!.


டிரெண்டிங் @ விகடன்