பிரபல குணச்சித்திர நடிகர் கோவை செந்தில் காலமானார்...!

பிரபல நடிகர் கோவை செந்தில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கோவை செந்தில்

கோவையைச் சேர்ந்த பிரபல நடிகர் குமாரசாமி என்கிற செந்தில். இவரது சொந்த ஊர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமாலுர் அருகே உள்ள பள்ளிபாளையம். மனைவி பெயர் லட்சுமி. இவருக்கு திலக் என்ற மகனும், பொன்மணி என்ற மகளும் உள்ளனர். வங்கியில் பணிபுரிந்து வந்த நடிகர் கோவை செந்தில், சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.“ஒரு கை ஓசை”,  “இது நம்ம ஆளு”, ”ஆராரோ ஆரிரரோ”, ”என் ரத்தத்தின் ரத்தமே”,  “பவுனு பவுனுதான்”, “மௌன கீதங்கள்”, “புதிய பாதை”, “அவசர போலீஸ் 100” மற்றும் "படையப்பா","கோவா"   உட்பட ஏராளமான படங்களில்  நடித்து  குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை  நடிகராகவும் தனி முத்திரை பதித்து பிரபலமானவர்.

பொதுவாக பல சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் மிகவும் எதார்த்தமான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் செந்தில். இவரை, இயக்குநர் பாக்யராஜின் ஆஸ்தான நடிகர் என்றும் கூறலாம். பாக்யராஜே ஒரு முறை இதை மேடையில் கூறியுள்ளார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த செந்தில், கோவை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது உடல் சூலுரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு குறித்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,``அவரது மறைவு திரைத்துறைக்கும் நடிகர் சமூகத்துக்கும்  மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில்  ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரதுஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!