வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/09/2018)

கடைசி தொடர்பு:18:00 (09/09/2018)

”பேருந்துகளை உடைப்போம்!” - முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் காட்டம்

“நாளை முழு அடைப்பின்போது இயங்கும்பேருந்துகளை உடைப்போம்” என்று முதல்வர் நாராயணசாமி முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாராயணசாமி

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை (10.09.2018) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை. அதையொட்டி, புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறது ஆளும் கட்சியான காங்கிரஸ். சிறப்பான முறையில் போராட்டத்தை நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ”பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு சிரமம் பாராமல் பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். முதல்வர், அமைச்சர் என்ற முறையில் எங்களால் கலந்து கொள்ள முடியாது என்பதால் நீங்கள்தான் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் நானும் அமைச்சர்களும் போராட்டத்தில் இறங்குவோம். மக்களின் நலனைவிட பதவி எங்களுக்கு முக்கியமில்லை” என்றார்.

அப்போது, “அரசுப் பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ நாளைக்கு எது ஓடினாலும் அதை உடைப்போம். ஆனால் எங்கள் மீது எந்த வழக்கும் போடக் கூடாது” என்று நிர்வாகிகள் கூச்சலிட்டனர். அதனால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி  அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. அதனால் புதுச்சேரியைச் சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமம் பாராமல் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார். இந்த போராட்டத்திற்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் நாளை ஆட்டோ, பேருந்துகள் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்டோ, பேருந்துகள் இயங்காது என்பதால் பெரும்பான தனியார் பள்ளிகளும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க