வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (09/09/2018)

கடைசி தொடர்பு:21:00 (09/09/2018)

`தமிழகத்தில் 70 லட்சம் கோடிக்கு மேல் ஊழல்!’ - பட்டியலிடும் ராமதாஸ்

தமிழ்நாட்டில் 70லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமதாஸ்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ``2014-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் 18 எம்.எல்.ஏக்கள் குறித்து புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவை, ஒவ்வொரு வரியாகப் படித்து சந்தேகம் ஏதாவது இருந்தால் தங்களிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் 9 மாதங்கள் ஆகியும் இதுவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை தமிழ்நாட்டில் 70 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.

12 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒப்பந்தங்கள் ஊழல், பல்கலைக்கழக ஊழல், போக்குவரத்து சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், இந்த ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு ஊழல் நடைபெற்று வருகிறது. ஜனவரி மாததொடக்கத்தில், பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டிவிடும் என்று கூறியிருந்தேன். எச்சரிக்கை செய்ததை நோக்கி பெட்ரோல் விலை சென்றுகொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வரி என்ற போர்வையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தார்மீக ஆதரவு தரும். ஆனால் போராட்டத்தில் பங்கேற்காது” என்று அவர் தெரிவித்தார்.