`தமிழக அரசின் பரிந்துரை எங்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்துள்ளது!’ - 7 பேரின் குடும்பத்தினர் நம்பிக்கை

கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிவரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது, தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

7 பேர் முன் விடுதலை


ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 7 பேரை முன்விடுதலை செய்வது குறித்து, ஆளுநருக்கு பரிந்துரை செய்வதும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவை,  சிறையில் வாடுவோரின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி கூறுகையில், `தமிழக அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. என் மகன் விரைவில் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், `தமிழக அரசின் பரிந்துரை எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும்” என்றார். பேரறிவாளன் தயார் அற்புதம்மாள்,``என் மகன் விரைவில் வீடு திரும்புவான் என நம்பிக்கையுள்ளது. முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் நான் நன்றி தெரிவித்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனிடையே, தமிழக அரசின் அறிவிப்பையடுத்து, அற்புதம்மாள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து நேரில் நன்றி தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!