வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (09/09/2018)

கடைசி தொடர்பு:21:22 (09/09/2018)

`ரூ.4 லட்சத்துக்கு மேல செலவு பண்ணிட்டேன்.. எப்படி மீண்டு வரப்போறேன்னு தெரியல!’ - வேதனையில் விவசாயி

`விவசாயி நடராஜன் ஏதேனும் விபரீத முடிவுக்கு போய்விடுவாரோ’ என அவரது குடும்பத்தினரும் ஊர்க்காரர்களும் மிகுந்த கவலையோடு பதறுகிறார்கள். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழ திருப்பந்துருத்தியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர் சுகுமாரன், பதற்றத்தோடு நமக்கு ஃபோன் செய்தார்.   

விவசாயி நடராஜன்

‘’சார், எங்க ஊர்ல உள்ள ’நடராஜன்’ங்கற விவசாயி 9 ஏக்கர்ல சம்பா நெல் சாகுபடி செய்ய நிலத்தை தயார் பண்ணி வச்சிருந்தார். இதுக்கு பாய் நாற்றாங்கால் அமைச்சி நாற்றுகளும் உற்பத்தி பண்ணி வச்சிருந்தார். வாய்க்கால்ல தண்ணீர் வராததால நடவு பண்ண முடியாமல் தவிச்சிக்கிட்டுயிருக்கார். நாற்றுகள் பழுத்துப் போயி கருக ஆரம்பிச்சிடுச்சி. போர்வெல்லுக்கு மின் இணைப்பு வாங்குறதுக்காக, பொண்ணு கல்யாணத்துக்காக வச்சிருந்த நகைகள் அடகு வச்சி இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் பணம் கட்டிருயிருந்தார். ரொம்ப மனசு உடைஞ்சிருக்கார். எப்ப வேணும்னாலும் என்ன மாதிரியான முடிவுக்கும் போகக்கூடிய மனநிலைக்கு வந்துட்டாரு. ஏதாவது விபரீத முடிவெடுத்துடுவாரோனு ஊர்க்காரங்க பயந்து கிடக்குறோம். நீங்க கொஞ்சம் தைரியம் சொல்லுங்க சார்” என நடராஜனை நம்மிடம் பேச வைத்தார் சுகுமாரன்.

நடராஜனிடம் பேசினோம். ‘’குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்துல இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் கட்டினால், மறுநாளே மின் இணைப்பு கொடுத்துடுவோம் அதிகாரிகள் சொன்னதை நம்பித்தான், என் பொண்ணு கல்யாணத்துக்காக வச்சிருந்த நகைகளை அடகு வச்சி பணம் கட்டினேன். இதைத் தவிர போர்வெல் அமைக்க, மோட்டார் வாங்குறதுக்குனு, ஏற்கெனவே இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணிட்டேன். போர்வெல் தண்ணீரை வச்சி சாகுபடி செஞ்சிடலாம்ங்கற நம்பிக்கையிலதான், பாய் நாற்றாங்கால் அமைச்சேன்.

வாய்க்கால்ல தேங்கி கிடந்த தண்ணீரை டீசல் இன்ஜின் மோட்டார் மூலமா, தண்ணீர் இறைச்சி நாற்றுக்கு கொடுத்தேன். 9 ஏக்கர் நிலத்துலயும் சேத்துழவு செஞ்சேன். ஆனால், கடந்த 15 நாளா வாய்க்கால்ல ஒரு சொட்டு தண்ணிர் இல்லை. உழவு செஞ்ச நிலம் வெடிச்சி கிடக்கு. தண்ணீர் கிடைச்சி மறுபடியும் சேத்துழவு செஞ்சாதான் நாற்று நட முடியும். இப்பவே நாற்றுகள் பழுத்துடுச்சி. ஏக்கப்பட்ட செலவு செஞ்சிட்டேன். எல்லாமே போயிடுச்சி. எப்ப மீண்டு வரப்போறேன்னு தெரியலை” என மனம் நொந்து பேசினார். இவருக்கு தைரியம் சொல்லிவிட்டு, இவரது பரிதாப நிலையை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்று வருகிறோம்.