திருவண்ணாமலையில் கைதுசெய்யப்பட்ட யோகேந்திர யாதவ் யார் தெரியுமா?

எட்டு வழிச் சாலை பிரச்னைக்காக தமிழக விவசாயிகளைக் காண  வந்த யோகேந்திர யாதவை, தமிழக காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக்  கைதுசெய்து விடுவித்தனர். யார் இந்த யோகேந்திர யாதவ் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யோகேந்திர யாதவ்

 பல காலமாக மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக செயல்பட்டுவருபவர். டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மூளையாகச் செயல்பட்டவர். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து வெளியேறி, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோருடன் சேர்ந்து, 'ஸ்வராஜ் அபியான்' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். கடந்த 2015-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான 'ஸ்வராஜ் அபியான்' என்ற கட்சியை உருவாக்கி, அதன் தலைவராக தற்போது வரை வழி நடத்திக் கொண்டிருப்பவர். 

2015-ம் ஆண்டு, வட இந்தியா முழுக்க வறட்சியான சூழல் நிலவியது. அப்போது, மெத்தனம்காட்டிய மத்திய அரசின் போக்கைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அதில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் முழுமையான நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. எனவே, வறட்சி பாதித்த மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, நியாயமாக வழங்கவேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருள்களும் முறையாக வழங்கவில்லை’ என வாதிட்டவர். அதன் பலனாக உச்ச நீதிமன்றம், இது நாடு முழுவதும் பயனளிக்கக்கூடிய சட்டம் என்று சொல்லி, உணவு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை அமல்படுத்த, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. 

2016-ம் ஆண்டு, வறட்சியின் பிடியில் இருந்த தமிழகம் முழுக்க கள ஆய்வு மேற்கொண்டவர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்றிணைக்க, 'அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு'வைக் கட்டமைத்தவர். இக்குழு, அகில இந்திய அளவில் 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து, கடந்த நவம்பர் மாதத்தில் 50,000 விவசாயிகளை அவர்களின் உரிமைகளுக்காக, டெல்லியின் பாராளுமன்ற வீதியில் போராடச்செய்தவர். கடந்த ஆண்டு, அகில இந்திய அளவில் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து, தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிரசாரம் செய்தவர். மதுக்கடைகள் மூடல், விவசாயிகள் பிரச்னை போன்ற பொதுநல பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தவர். 

யோகேந்திர யாதவ்

இதையடுத்து, கடந்த 8-ம் தேதி  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வந்திருந்தார். எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்திக்கச் சென்றார். விவசாயிகளை சந்திக்கும் பயணத்தைத் தொடங்கியவுடன்,  சி.நம்மியந்தல் பகுதியில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். கைதுசெய்த செங்கம் காவல்துறை அவரை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தது. பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னர், காவல்துறை அவரைத் தடுத்த காரணத்தைத் தெரிவித்தது. அதன்பின்னர், சனிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்ட அவர், நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். இவரது கைது நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!