ஏழு பேரின் விடுதலையில் ஆளுநரின் முடிவு என்ன மாதிரியானதாக இருக்கும்?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக அரசின் பரிந்துரைக்கு என்ன முடிவெடுக்கலாம் என்பதுகுறித்து மிகுந்த ஆலோசனையில் உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பாயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை விடுதலைசெய்ய ஆளுநருக்குப் பரிந்துரைசெய்துள்ளது தமிழக அமைச்சரவை. ஆளுநர் மாளிகையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்துவருகிறது. 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு

நேற்று (9.9.2018) நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு விடுதலை வழங்கலாம் என்ற பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையின்பேரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு விதமான முடிவை மேற்கொள்ளலாம் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ், குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர்கள், சிறைத்தண்டனையில் இருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது, விடுதலை வழங்குவது, தண்டனைக்குரிய காலத்தைக் குறைப்பது, மரணதண்டனையிலிருந்து விடுப்பது போன்றவைகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. இவர்கள், மத்திய அரசு அல்லது மாநில அரசுகளின் பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம். 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு

பொதுவாக, மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுவது வழக்கம். ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் உள்ளவர்கள் விடுவிப்பதுகுறித்து உடனே முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார் ஆளுநர். குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலைசெய்வதில் மத்திய அரசு விருப்பமில்லாத நிலையில் இருந்திருக்கிறது.  இதனால், ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தை, `சர்வதேச சதி' என்றே நீதிமன்றத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்திருக்கிறது மத்திய அரசு. கூடவே, `நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியம், ஏழு பேரையும் விடுதலைசெய்வது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்திருக்கிறது. 

`சிறைத்தண்டனை பெற்றுவருபவர்களை ராஜீவ்காந்தி மகனும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், ராஜூவ் காந்தி படுகொலை சம்பவ குண்டுவெடிப்பில், காவல் துறை அதிகாரிகள் உள்பட 14 பேர் இறந்துள்ளனர். இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்' என்கிறது மத்திய அரசு. 

2014-ம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, 'ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தில் சிறைத்தண்டனையில் உள்ள ஏழு பேரும் விடுதலைசெய்யப்படுவார்கள்' என்று சட்டசபையில் வைத்து அறிவித்திருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்துவந்ததால், ஏழு பேரும் சிறைத்தண்டனையில் இருந்து வெளியே வருவார்களா என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. 

பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து கருணை மனுவைத் தாக்கல்செய்துவந்தார். இவரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பை செப்டம்பர் 6-ம் தேதி அறிவித்தது. இதில், 'ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனை குறித்த முடிவை ஆளுநர் எடுத்துக்கொள்ளலாம்' என்று தீர்ப்பு வழங்கியது. இதனடிப்படையில், தமிழக ஆளுநர் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று எல்லோரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக அரசின் பரிந்துரைகுறித்து என்ன முடிவெடுக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையைக் கேட்டுப் பெறவும், மாநில அரசின் பரிந்துரையை எதிர்த்து யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், இதைக் காரணம் காட்டி, மாநில அரசின் பரிந்துரையை நிராகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நிராகரித்தால், பேரறிவாளன் மீண்டும் ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல்செய்ய வாய்ப்புள்ளது. 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு எடப்பாடி பழனிசாமி

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளுநரின் முடிவு பாரதிய ஜனதா கட்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மனிதாபிமான அடிப்படையில், ஏழு பேரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்று குரல்கொடுத்து வருகின்றன. `27 வருடங்களாகச் சிறையில் இருப்பதே மிகப்பெரிய தண்டனை. இதில் இருந்து விடுதலை வழங்கவேண்டியது அவசியம்' என்று பல அரசியல் கட்சிகளும் குரல்கொடுக்கின்றன. ஜெயலலிதா ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்ததைத் தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும், ஏழு பேரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்று பரிந்துரைசெய்துள்ளனர். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தாலும் தமிழக அரசின்மீது கடுமையான எதிர்ப்பு மனநிலை இருந்துவந்தது. தற்போது ஏழு பேரின் விடுதலைக்குப் பரிந்துரை வழங்கி இருப்பதன்மூலம், எதிர்ப்பு மனநிலையின் போக்கு மாறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!