வெளியிடப்பட்ட நேரம்: 06:47 (10/09/2018)

கடைசி தொடர்பு:07:53 (10/09/2018)

ஏழு பேரின் விடுதலையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் - சுப்பிரமணிய சுவாமி கருத்து!

`முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி., சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 

ராஜீவ் காந்தி

நேற்று (9.9.2018), தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை. 

பல்வேறு கட்சியினரும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை வரவேற்றுள்ளனர். `ஆளுநர், ஏழு பேரையும்  உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி., சுப்பிரமணிய சாமி, `ஏழு பேரின் விடுதலைகுறித்த தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இது வெறும் பரிந்துரை மட்டுமே. இதுகுறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை ஆளுநர் படிப்பார். அறிவுக்கூர்மையுள்ள  ஆளுநர், தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிப்பார்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிஜேபி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், ``ஏழு பேரின் விடுதலைக்கு பா.ஜ.க ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை. இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் ஆணைக்கு உட்பட்ட விஷயம். ஆளுநர் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும்" கருத்து தெரிவித்துள்ளார்.