`இன்று நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம்!' - தமிழகத்தின் நிலை எப்படி?

தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உட்பட, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் இன்று நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. 

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி அடிப்படையில் உயர்த்திவருகின்றன. வரலாறு காணாத அளவுக்கு சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மத்திய அரசைக் கண்டித்து, இன்று நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. 

கர்நாடகாவில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு, தமிழகத்தில் தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ம.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இருப்பினும், லாரிகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்காது என அந்தந்த தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல, 65 லட்சம் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. 

முழு அடைப்புப் போராட்டத்து ஆதரவாக, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவில், காங்கிரஸ் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டம் நடத்திவருகின்றனர். புதுச்சேரியில், அரசு போக்குவரத்து இயங்கவில்லை. மேலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, கர்நாடகா மற்றும் கேரளா எல்லையில் தமிழகப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் சுமார் 20,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!