வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (10/09/2018)

கடைசி தொடர்பு:11:29 (10/09/2018)

தென்கரை சாலையில் நடந்த ரிலே... ரவுடி புல்லட் நாகராஜை விரட்டிச்சென்று பிடித்த டிஎஸ்பி ஆறுமுகம்

மதுரை மத்திய சிறைச்சாலை காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளாவுக்கு வாட்ஸ்அப் ஆடியோ மூலமாக கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ், இன்று காலை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

 ரவுடி புல்லட் நாகராஜ்

தேனி மாவட்டம், ஜெயமங்கலம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த வாரம் சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவுக்கு வாட்ஸ்அப் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்தார், ரவுடி புல்லட் நாகராஜ். இது தொடர்பாக சிறைத்துறை அலுவலர், மதுரை காவல்துறை ஆணையருக்கு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன் அடிப்படையில், மதுரை கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, புல்லட் நாகராஜை தேடிவந்தனர். இதனிடையே, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை காவல்நிலைய ஆய்வாளர் மதனகலாவுக்கும் மிரட்டல் விடுத்து, இரண்டாவது ஆடியோ ஒன்றை வெளியிட்டார் புல்லட். இச்சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பானது. தொடர்ச்சியாக போலீஸ் அதிகாரிகளை மிரட்டி ஆடியோ வெளியிடும் புல்லட் நாகராஜை தேடும் பணி தீவிரமானது.

இந்த நிலையில், நேற்று புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார் புல்லட் நாகராஜ். அதில், தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், புல்லட் நாகராஜை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என தீவிரம் காட்டினர் காவல் துறையினர். இதனிடையே, இன்று காலை, தென்கரையில் இருந்து பெரியகுளத்துக்கு இருசக்கர வாகனத்தில் புல்லட் நாகராஜ் செல்வதாக பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகத்துக்கு தகவல் கிடைத்தது. அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், காரில் சம்பவ இடத்துக்கு விரைந்தார். காவல் துறையினர் வருவதை அறிந்த நாராஜ், புல்லட்ரில் வேகமாகச் சென்றார். அதை அறிந்த டிஎஸ்பி ஆறுமுகம், காரில் அவரை விரட்டிச்சென்றார். குறிப்பிட்ட தூரம் வரை விரட்டிச் சென்ற டிஎஸ்பி ஆறுமுகம், ரவுடி நாகராஜைப் பிடித்துக் கைதுசெய்தனர். தென்கரை சாலையில் நடந்த இந்த ரிலே சம்பவம், வாகன ஓட்டிகளைப் பரபரப்புக்குள்ளாக்கியது. தற்போது புல்லட் நாகராஜ், தென்கரை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.