`எந்த அடிப்படையில் தடை கேட்கிறீர்கள்?'- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்துவரும் விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வேதாந்தாவின் மனுவை ஏற்ற தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், உற்பத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

தூத்துக்குடி ஆலை

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்துவரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்து. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `எந்த அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நடத்தி வரும் விசாரணைக்குத் தடை விதிக்க முடியும்' என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது நீதிமன்றம். அதேபோல், `ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வு நடத்தவும் தடை விதிக்க முடியாது' என்றுகூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!