நீல மலையாக மாறிய நீலகிரி! பிரமிப்பை ஏற்படுத்திய குறிஞ்சிப் பூ சீசன்

குறிஞ்சிப்பூ

குறிஞ்சி மலர்கள் பூத்துவிட்டன. எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதி கிராமங்களில், நீலவண்ணங்களை வீசிக்கொண்டிருக்கின்றன குறிஞ்சிப் பூக்கள். உதகை அருகிலுள்ள அணிக்கொரை, எப்பநாடு, சின்னக் குன்னூர் மற்றும் மஞ்சூர் பகுதியிலுள்ள முள்ளி, முக்கி மலைப் பகுதிகளில் ஏராளமாகப் பூத்துக்குலுங்கி, மக்களை ஈர்க்கும் விதமாக மிகவும் அழகாகக் காட்சி தந்துகொண்டிருக்கிறது.

தொல்காப்பியத்தில், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என அழைக்கப்படுகிறது. காரணம், குறிஞ்சிச் செடிகள் மலைப் பகுதிகளில் மட்டுமே பரவலாக வளரக்கூடியவை என்பதால்தான். மேற்குத்தொடர்ச்சி மலையும் கிழக்குத்தொடர்ச்சி மலையும் இணையும் பகுதியாம் நீலகிரியில், நீலக்குறிஞ்சி மலர்கள் பரவலாக மலர்ந்து,  அவ்விடமே நீலநிறமாக இருந்ததால்  அப்பகுதிக்கு நீலகிரி என்று பெயர் வந்தது.

கோவில்மணி போன்ற வடிவத்தில், நீல வண்ணமாக மலைப்பகுதி முழுவதும் பூத்துக்குலுங்கி, காண்பவர்களின் மனதில் புதுப்புது வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன இம்மலர்கள். பொதுவாக, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் இக்குறிஞ்சி மலர்கள், கடந்த 2006-ம் ஆண்டில் பூத்தது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் கண்டு மகிழமுடியும்.

குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா (Strobilanthes Kunthiana) என்பது இவற்றின் தாவரவியல் பெயர். இதன் குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 வகைச் செடிகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இதில் பாதியளவு செடிகள் இந்திய நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. 30 வகையான செடிகள் கேரளா, நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் வளரும் இச்செடிகள், 30 முதல் 60 செ.மீ உயரம் வரை வளரும். இச்செடிகள்,  தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப 180 செ.மீ உயரம்கூட வளரும்.

குறிஞ்சிப்பூ

நீலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்கள், நீலமலையில் குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து தங்களது வயதைக் கணக்கிட்டுள்ளனர். குறிஞ்சிச் செடிகளில், ஒரு சில 3 மாதத்துக்கு ஒருமுறையும், 7 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 17 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மற்றும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன என்றும் கண்டுள்ளனர்.

ஆராய்ச்சியாளர் ராபின்சனின் குறிப்புப்படி, ஒரு குறிஞ்சித் தாவரத்தில் சராசரியாக 82 மஞ்சிரிகளும், ஒவ்வொரு மஞ்சிரிகளில் 24 பூக்களும், ஆக மொத்தம் ஒரு தாவரத்தில் 1,768 பூக்கள் உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி தேன் இருப்பதாகவும், அதன்படி ஒரு செடியிலிருந்து 7,072 மி.லி தேன் உருவாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி, பரவலாக பூத்துக்குலுங்கும் காலத்தில், தேனீகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகக் காணப்படும்.

இந்த வருட சீஸனில், அதாவது ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை காணப்படும் மலர்கள்மூலம் சேகரிக்கப்படும் தேன், மிகச் சுவையாகவும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!