'ஞாயிற்றுக்கிழமை கேபினட் கூடியதில்லை!' - ஏழு பேர் விடுதலைக்காக பேசிய எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy speaks about perarivalan pre release

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (10/09/2018)

கடைசி தொடர்பு:15:06 (10/09/2018)

'ஞாயிற்றுக்கிழமை கேபினட் கூடியதில்லை!' - ஏழு பேர் விடுதலைக்காக பேசிய எடப்பாடி பழனிசாமி

இது ஜெயலலிதா எடுத்த முடிவு. அவர் எடுத்த முடிவில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம்.

'ஞாயிற்றுக்கிழமை கேபினட் கூடியதில்லை!' - ஏழு பேர் விடுதலைக்காக பேசிய எடப்பாடி பழனிசாமி

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகளை, ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்ப இருக்கின்றனர். ' 27 வருடங்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவு. ஆளுநரிடம் நிச்சயம் பேசுவேன்' என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ' உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முன் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைப்பது'  என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறது தமிழக அரசு. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் முதல்வரை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை தொடர்பாக, ஆதரவாளர்களுடன் விரிவாகப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

அவர் பேசும்போது, ' பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இதை நாங்கள் கடமைக்காகச் செய்யவில்லை. அதனால்தான் ஞாயிற்றுக்கிழமை என்றுகூடப் பார்க்காமல் அமைச்சரவையைக் கூட்டியிருக்கிறோம். இதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை நாள்களில் அமைச்சரவை கூடியதில்லை. இது ஜெயலலிதா எடுத்த முடிவு. அவர் எடுத்த முடிவில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். தவிர, அவர்களும் 27 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டார்கள். பரோலிலும் போய் வந்தார் பேரறிவாளன். சிறையிலும் நன்னடத்தையோடு செயல்பட்டு வருகிறார். அவரால் எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவருமே ஆதரிக்கவும் செய்கிறார்கள்' என்றவரிடம், ' ஆளுநரிடமும் பேச வேண்டும்' எனக் கூறவே, ' நிச்சயம் பேசுகிறேன். ரோசய்யா அளவுக்கு இவரிடம் ஈஸியாகப் பேசிவிட முடியாது. இருப்பினும், நான் பேசுகிறேன்' எனப் பேசியிருக்கிறார்.  

``ஏழு பேர் விடுதலை தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு இன்னும் ஃபைல் சென்று சேரவில்லை. 'ஆளுநர் கைகளில்தான் விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது' எனப் பேசத் தொடங்கிவிட்டனர் பா.ஜ.க-வினர். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது, பாதி கிணற்றைத் தாண்டியது போலத்தான். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயுள் கைதிகளை படிப்படியாக விடுதலை செய்வதுபோல, இவர்களையும் விடுதலை செய்வார்களா எனத் தெரியவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில், ஆளுநர் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை என உறுதியாக நம்புகிறோம். ராஜ்பவன் மாளிகை எடுக்கப் போகும் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.