வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (10/09/2018)

கடைசி தொடர்பு:17:06 (10/09/2018)

குழந்தைக் கடத்தலின் அதிர்ச்சிப் பின்னணி! - விசாரணைக் குழு அமைக்குமா அரசு?

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 27 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். கடத்தப்படும் குழந்தைகள் பல்வேறு மாநிலங்களுக்கு விற்கப்பட்டு, இறுதியில் அவர்கள் தந்தை, தாயைப் பார்க்க முடியாமலே மடிந்து விடுகின்றனர். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசு இது தொடர்பான விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

குழந்தை கடத்தல்

பிறந்த சில மணி நேரத்திலேயே, தன் குழந்தையின் முகத்தைக் காண முடியாமல், குழந்தை திருட்டுக்கு பலியான தாய்மார்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. அவர்களின் அழுகைக்கும், வேதனைக்கும், தீர்வு என்பது இதுவரை எட்டப்படாமலே உள்ளது.

இதனிடையே, இது தொடர்பாக சமூக ஆர்வலர் நிர்மல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரிடம் குழந்தைக் கடத்தல் குறித்து கேட்டபோது, ``குழந்தைக் கடத்தல் என்பது சர்வதேச மாஃபியா. பல்வேறு காரணங்களுக்காக குழந்தைக் கடத்தல் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் கடத்தப்படும் குழந்தைகள், வெளி மாநிலங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேபோல, குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் பணம் ஈட்டுவதற்காக ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. முக்கியமாக நரபலி கொடுப்பதற்காகவும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். ராஜஸ்தானில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுக்கு ஆண் குழந்தையில்லாத காரணத்தினால், நரபலி கொடுப்பதற்காக குழந்தைகளைக் கடத்தியது தெரியவந்தது. கேரளாவிலும் இதேபோலத்தான் நடந்தது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள் மீது செலுத்தி, அவர்கள் மூலம் மருந்துகளைப் பரிசோதிக்க, வெளிநாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.இதில், உறுப்புகளை திருடுவதற்காக திருடப்படுகின்றனர். தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும் குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில், ஈராக்கில், குழந்தையின் உடலில் குண்டுகள் கட்டப்பட்டு வெடிக்கச்செய்துள்ளனர்.

இவர்களின் டார்கெட், பொது இடங்களில் உலாவும் குழந்தைகளும், பிளாட்ஃபாரத்தில் இருக்கும் குழந்தைகளும்தான். பிளாட்ஃபாரத்தில் உள்ள குழந்தைகளைத் திருடுவதன் மூலம், அவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது அரிது என்பதுதான் காரணம். 5 முதல் 10 லட்சத்துக்கும் மேலாக விலைக்கு விற்கப்படுகின்றனர். இது தவிர, கோயில்கள், பீச், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைக் கடத்திச் செல்கின்றனர். குழந்தைகளைக் கடத்திய சில மணி நேரத்திலேயே அதன் அடையாளத்தை மாற்றி விடுகின்றனர். மொட்டை அடித்து, ஆடைகளை மாற்றி உருமாற்றி விடுகின்றனர். குழந்தைக் கடத்தல் வழக்கின்போது, நீதிபதி நாகமுத்து முன் நாங்கள் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வால்டாக்ஸ் சாலையில் குழந்தைகளைப் பறிகொடுத்த தம்பதியை அழைத்துச் சென்றோம். குழந்தையைப் பறிகொடுத்த பெண்ணிடம் நீதிபதி, ``எப்படி உங்கள் குழந்தை காணமல் போனது’ என்று கேள்வி கேட்க, அந்தப் பெண்கூறிய பதில் அங்கிருந்தவர்களை அதிரச்செய்தது. ``எனக்கு ஒரு பெண் குழந்தை. தவமிருந்து பெற்ற குழந்தை அவள். என்னுடயை குழந்தையின் கையை முந்தானையோடு முடிச்சுப்போட்டு தூங்கிக்கொண்டிருந்தேன். காலை எழுந்து பார்க்கும் போது குழந்தை காணவில்லை” என்றார். நீதிபதி அதிர்ந்து போனார். நாங்கள் இந்த அரசைக் கேட்பது, சிலைக்கடத்தலுக்கு ஒரு இலாகாவுடன் கூடிய அதிகாரியை நியமித்தது போல, உயிருள்ள குழந்தைகள் கடத்தப்படுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புள்ளிவிவரம் ஒன்றின்படி, இந்தியாவில் நாள் ஒன்றுக்கு, 27 குழந்தைகள் திருடப்படுகின்றன. குழந்தைக் கடத்தலுக்காக நாங்கள் தொடுத்த வழக்கு 24-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் அரசுத் தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.