சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை! 67 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 67 முதியவருக்குத் திருவள்ளூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முதியவர்

ஆந்திராவை சேர்ந்த 12 வயது சிறுமி, திருவள்ளூர் அடுத்த வரதாபுரத்தில் உள்ள தன் சித்தியின் வீட்டில் தங்கி இருந்தார். இவரின் தாய், தந்தை இறந்துவிட்டனர். பள்ளிக்கு அனுப்பாமல் அவரின் சித்தி வீட்டில் தங்கி இருந்த சிறுமியை ஆடு மேய்க்க அனுப்பி வைத்தார் சித்தி. உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அடிக்கடி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, சிறுமியை அருகில் உள்ள பட்டரைபெரும்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரின் சித்தி அழைத்துச் சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் சித்தி, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (67) என்ற முதியவர் ஆடு மேய்க்கும்போது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி பரணிதரன், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!