`ஜெயலலிதா சிகிச்சை அறிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசுதான்!’ - தனிச் செயலாளர் தகவல்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்போலோ அறிக்கைகள் அனைத்தும், தமிழக அரசுதான் வெளியிட்டது என ஜெயலலிதாவின் தனிச் செயலராக இருந்த, ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் இன்று விசாரணை ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக அப்போலோ தரப்பு வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம்

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விடைகாணும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அனைத்து தரப்பினரையும் விசாரித்து வருகிறது. அந்த வகையில்,கடந்த வெள்ளிக்கிழமை அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கமளித்தார். இவர் ஜெயலலிதா தொடர்பாக அப்போலோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளில் கையொப்பமிட்டிருந்தவர் என்ற அடிப்படையில் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவரிடம் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட மறுநாள் செப்டம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும் ஜெயலலிதா மறைந்த பின் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்சார்ஜ் சம்மரியில் உள்ள தகவல்களும் ஒத்துப்போகவில்லையே,  அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ளவை உண்மையா அல்லது டிஸ்சார்ஜ் சம்மரியில் இருப்பவை உண்மையா எனச் சரமாரியாகக் கேள்விகளை ஆறுமுகசாமி எழுப்பினார்.

இந்த நிலையில் மறு விசாரணைக்காக இன்று ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் ராமலிங்கத்திடம் ஜெயலலிதா தொடர்பான மருத்துவ அறிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார். சுமார் 2 மணி நேரம் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ தரப்பு வழக்கறிஞர், "ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்போலோ அறிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால், அரசின் சொந்த நிறுவனமான செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலமாக அரசே வெளியிட்டதாக ஜெயலலிதாவின் தனிச் செயலராக இருந்த ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் இன்று விசாரணை ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளர்.  மருத்துவ அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அப்போலோ கூறியபடி வெளியிடப்பட்டதா இல்லையா என்பதுபற்றி அடுத்த வாரம் நடைபெறவுள்ள விசாரணையில் தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!