`பெட்ரோல் விலையைக் குறைங்க பிள்ளையாரப்பா'- நூதனப் போராட்டம் நடத்திய கட்சியினர்

`பிள்ளையாரப்பா பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கப்பபா' என விநாயகர் சிலை முன்பு பெட்ரோலை வைத்து இந்து மக்கள் கட்சியினர் வழிபட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு, சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும்  என வலியுறுத்தி நூதனப் போராட்டம் நடத்தினர். அதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்களை கொண்டு வர வேண்டும். எத்தனால் மற்றும் மூலிகை கலந்த பெட்ரோல் விற்பனையை அனுமதிக்க வேண்டும். எலெக்ட்ரானிக் பேட்டரி கார் விற்பனைக்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிடம் முறையிடுவதைக் காட்டிலும், விநாயகரிடம் முறையிடலாம் எனக் கூறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் மடத்துத் தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை முன்பு தண்ணீர் பாட்டிலில் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கி வைத்து அதற்கு பூ மாலை போட்டனர். பின்னர் பெட்ரோலை விநாயகர் முன்பு வைத்து  பூஜைகள் செய்து பூக்களைத் தூவியதோடு, `பிள்ளையாரப்பா, நீ தான் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்' என வேண்டிக் கொண்டனர்.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமுர்த்தியிடம் பேசினோம். ``பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் விலையைக் குறைக்க மாட்டார்கள். மேலும் பி.ஜே.பி-யின் ஆட்சிக்காலத்தில்தான் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல வகையிலும் விலைவாசி உயர்வும் ஏற்படுகிறது. எனவே, இதை மத்திய அரசிடம் கேட்டால் நடக்காது எனத் தெரிந்து விநாயகர் முன்பு பெட்ரோலை வைத்து விலையைக் குறைக்க வேண்டும் என அவரை வழிபட்டு வேண்டிக் கேட்டுக் கொண்டோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!