வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (10/09/2018)

கடைசி தொடர்பு:19:00 (10/09/2018)

குட்கா ஊழலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 4 நாள் சி.பி.ஐ காவல்!

குட்கா ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 பேரையும், சி.பி.ஐ அதிகாரிகள் நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை சி.பி.ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குட்கா ஊழல்

குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றன. குட்கா வியாபாரி மாதவராவ் பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குட்கா ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களிடம், மேலும் பல தகவல்களைத் திரட்ட வேண்டியிருப்பதால், அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதற்காக சென்னை ஹைகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சி.பி.ஐ தரப்பில் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், சி.பி.ஐ சிறப்பு கோர்ட் 4 நாள்கள் சி.பி.ஐ காவலுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து மாதவராவ் அவரின் பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். 5 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சி.பி.ஐ அதிகாரிகளின் 5 நாள் விசாரணைக்குப் பின்னர், குட்கா ஊழலில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.