``கத்தி தீட்டினத மட்டும் பேசுறாங்க... மாணவர்கள் இதையும் செய்றாங்க!” - அப்படி என்ன செய்தார்கள்? | Students join hands to do good things also says social worker

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (10/09/2018)

கடைசி தொடர்பு:18:58 (10/09/2018)

``கத்தி தீட்டினத மட்டும் பேசுறாங்க... மாணவர்கள் இதையும் செய்றாங்க!” - அப்படி என்ன செய்தார்கள்?

மாணவர்கள்

``பொது இடங்களில் சில மாணவர்கள் ஈடுபடும் வன்முறைச் செயல்களை மட்டும் திரையிட்டுக் காட்டுபவர்கள் அதே மாணவர்கள் செய்யும் நற்பணிகளை வெளியிட ஈடுபாடு காட்டுவதில்லை" என்ற ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் இந்திய விழிப்பு உணர்வு இயக்கத்தின் நிறுவனர் வெற்றிவேல்.

2013-ம் ஆண்டில் 10 பேர் மட்டுமே தொடங்கிய இந்த இயக்கத்தில் தற்பொழுது பல மாவட்டங்களில் 22 கிளைகள் தொடங்கி மொத்தம் 250 உறுப்பினர்கள் கொண்ட தொண்டு நிறுவனமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் பல்வேறு சுத்திகரிப்பு பணிகள் மற்றும் விழிப்பு உணர்வு பணிகளைப் மேற்கொண்டு மக்களுக்கு மிக நெருக்கமான இயக்கமாகத் தன்னை மாற்றிக்கொண்டுள்ளது இவ்வியக்கம். அவர்கள் இந்த ஆண்டு தொடங்கிய கோடம்பாக்கம் 2020 என்னும் திட்டம் சென்னையில் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி ட்ரெண்ட் ஆகி உள்ளது.

``இந்தியா 2020 எப்படி இருக்கணும் அப்படின்னு அப்துல் கலாம் சொல்லிருக்காரு. அதுக்கு ஒரு சின்ன அடியா கோடம்பாக்கம் 2020 எப்படி இருக்கணும் அப்படின்னு நாங்க நினைச்சு அதுக்கான செயல்தான் இந்த கோடம்பாக்கம் 2020 திட்டம்" என்று தங்களின் நோக்கத்தைக் கூறினார் வெற்றிவேல்.

கோடம்பாக்கம் 2020

மேலும் படங்களுக்கு

``அரசாங்கம் சுத்தம் செய்யல, அரசு முறையா பராமரிக்கல அப்படின்னு குறை சொல்ற ஒவ்வொருவரும் முதல்ல அவுங்களோட பங்க ஒழுங்கா செய்தார்களானு பார்த்தா இல்லைன்னு தான் வரும். அப்ப எங்கள் முதல் வேலை இங்கிருக்கும் மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும். எங்கள் குழு வீடு வீடாகச் சென்று அனைவரிடமும் குப்பைகளைப் பிரித்துப் போட வேண்டும்; பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்பு உணர்வில் தொடங்கி அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து அது மீண்டும் அசுத்தம் ஆகாமல் இருக்க அனைத்துச் சுவர்களிலும் வண்ண ஓவியங்கள் தீட்டினோம். இங்கிருக்கும் பூங்காக்கள் அனைத்தையும் சீரமைத்தோம். சென்னையில் இருக்கும் எட்டு கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு உறுதுணையாக இருந்தனர். அவர்கள் இல்லையேல் இது நிச்சயம் சாத்தியம் இல்லை. இப்பணியைத் தற்பொழுது ஒரு தெருவில் மட்டும் செய்து வருகிறோம். பின் கொஞ்சம் கொஞ்சமாக கோடம்பாக்கம் முழுவதிலும் நீட்டிக்க வேண்டும் என்னும் திட்டத்தில் இருக்கிறோம்"
 
இவ்வாறு கூறிக்கொண்டே அந்தத் தெருவைச் சுற்றிக் காட்டினார். சுத்தம் செய்யப்பட்டு, ஓவியம் தீட்டப்பட்டு அந்தத் தெரு முழுவதும் வண்ணமயமாகக் காட்சி அளித்தது. ``நாங்க இங்க பண்ணிட்டு இருக்கிறத பார்த்து இன்னும் சில பேர் அவுங்க அவுங்க இடத்துல இப்படி பண்ணாலே போதும். அனைத்து இடங்களும் மாறிடும்" என்றார் வெற்றிவேல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க