வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (10/09/2018)

கடைசி தொடர்பு:20:28 (10/09/2018)

`அந்தக் கஷ்டத்தை இனிமேலும் என் பேத்தி அனுபவிக்கக் கூடாது!’ - நெகிழும் முருகனின் தாயார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பாயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலைசெய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை. இதனால், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், தமிழக அரசுக்கும் முதல்வருக்கு மற்றும் விடுதலைக்காக குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் முருகனின் தாயார் சோமணி வெற்றிவேல். 

சோமணி

இது தொடர்பாக முருகனின் தாயார் சோமணியிடம் பேசினோம். ``தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 7 பேரை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 27 ஆண்டுகள் என் மகனும் மருமகளும் படாத கஷ்டங்களைப் பட்டுவிட்டனர். அவர்கள் இருவரும் கொஞ்ச காலமாவது அவர்களுடைய மகளுடன் சேர்ந்து வாழவேண்டும். 2 வயதில் அவளை விட்டு பிரிந்தார்கள் இப்போது என் பேத்திக்கு 24 வயது ஆகிறது. அந்தக் குழந்தை அப்பா, அம்மா இருந்தும் அவர்களின் அரவணைப்பு இல்லாமல் அனாதை போலவே வளர்ந்து விட்டாள். அம்மாவின் அன்பு இல்லாமல் வளரும் குழந்தைகள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தாய்மார்களுக்கும் தெரியும். அந்தக் கஷ்டம் இனிமேலும் என் பேத்தி அனுபவிக்கக் கூடாது.

சிறையில் இருக்கும் 7 பேருமே வாழ்கையை இழந்துவிட்டு இருக்கிறார்கள். இந்தக் கடைசிக்காலத்திலாவது, அவர்களின் குடும்பத்தோடு இருக்க வேண்டும் எனக் கடவுளை வேண்டுகிறேன். சிறையில் இருக்கும் 7 பேரும் என் பிள்ளைகள்தான். அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என இந்தத் தாயிக்கு ஆசையிருக்காதா’’ என்றார் கண்ணீருடன்.

மேலும், ``என் பேத்தி, அவளுடைய அப்பா, அம்மா முன்னிலையில்தான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாள். அவர்கள் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாள். அவளின் ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நளினி-முருகன் வெளியே வந்த உடன் அவர்களின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். விடுதலைக்குப் பிறகு நளினி-முருகன் இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கும்.

7 பேரின் விடுதலைக்கு பரிந்துரை செய்த தமிழக அரசுக்கும் அமைச்சரவைக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வரை நேரில் பார்த்து நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். ஆளுநர் அவர்களுக்கு மிகவும் நன்றி. அவர் 7 பேர் குடும்பத்தையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நினைத்து நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.  

அதேபோல், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா அவர்களுக்கும் நன்றி. சோனியா காந்தியையும் ராகுலையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். அந்தக் குடும்பத்தைப் பற்றியும் நான் யோசித்து இருக்கிறேன். அவர்கள் வீட்டில் இருக்கும் ஒருவர் இல்லாமல் போனால், அவர்கள் மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவர்களைச் சந்தித்து என் மகன் தப்பு செய்யவில்லை என்று சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க