``குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புத் துறை!'' - பொன்னார் தகவல்

பொன்.ராதாகிருஷ்ணன், குமரி

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறை மத்திய அரசு மூலம் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புச் சிகிச்சைக்கான துறையைப் பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்‌ஷா திட்டத்தின் (PMSSY) கீழ் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இது குறித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் அவர் உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின்போது கேரள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வி.முரளிதரன் உடனிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana) அல்லது பிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள மக்களுக்கு உச்சபட்ச மருத்துவ சேவை (tertiary level healthcare) கிடைப்பதில் உள்ள சமமின்மையைச் சரிக்கட்டும் நோக்கில்மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் மார்ச் 2006-ம் ஆண்டு ஒப்புதல் பெற்றது. பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. நமது நாட்டின் சேவை பெறாத பிராந்தியங்களில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் போன்ற புதிய நிறுவனங்களை அமைத்தல். தற்போது, செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துதல் என்ற திட்டங்கள் உள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்புச் சிகிச்சை துறை உருவாக்கப்படும். மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படும். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இன்னும் தரமான உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!