பெட்ரோல் கேன்களைத் தலையில் சுமந்து போராடிய விவசாயிகள்!

கும்பகோணத்தில் விவசாயிகள் பெட்ரோல் மற்றும் டீசலை 75 சதவிகிதம் மானிய விலையில் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தலையில் டீசல் கேன்களைத் தூக்கியவாறு உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள்

நாடு முழுவதும் இன்று பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும் என உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் இல்லாத வெற்றுக் கேன்களைத் தலையில் தூக்கியபடி  கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, `கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு வரலாறு காணாத அளவுக்கு  டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை நாள்தோறும் உயர்த்தி வருகிறது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டீசல் விலை உயர்வால் விவசாயிகள் மோட்டாரில் பயிர்களுக்குத் தண்ணீர் இறைக்க முடியவில்லை. டிராக்டர் கொண்டு உழவு செய்ய முடியாமலும் தவித்து வருகிறோம். இயந்திர நடவு, அறுவடை, வைக்கோல் கட்டும் இயந்திரம் போன்றவற்றையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே விவசாயிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தினம் தினம் பல துயரங்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் தங்களது வரிகளைக் குறைத்து விவசாயம் பாதிக்காமல் இருக்கவும், உணவு உற்பத்தி குறையாமல் பாதுகாக்கவும் அனைத்து விவசாயிகளுக்கும் 75 சதவிகிதம் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்’ எனக் கோஷங்கள் எழுப்பினர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!