வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (10/09/2018)

கடைசி தொடர்பு:21:20 (10/09/2018)

ஒரே நாளில் 137 திருமணங்கள்! -பந்த் தினத்தில் களைகட்டிய குருவாயூர் கோயில்

பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஓடாத நிலையில் இன்று ஒரே நாளில் குருவாயூர் கோயிலில் 137 திருமணங்கள் நடந்துள்ளன.

குருவாயூர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. பந்த்தால் தமிழகத்தை விட கேரளத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இன்று கூட்டம் களைகட்டியது. அதிலும் இன்று ஆவணி மாதத்தின் முக்கிய முகூர்த்த தினம் என்பதால் 137 திருமணங்கள் குருவாயூரில் நடந்தன. கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாகத் தடைப்பட்ட திருமணங்கள் அனைத்தும் இன்று நடந்துள்ளன. அதனால்தான் ஒரே நாளில் 137 திருமணங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. கூடுதல் திருமணங்கள் நடந்ததால் கோயில் வளாகம் முழுவதும் கூட்டம் களைகட்டியது. பார்க்கிங் ஏரியா முழுவதும் நிரம்பி வழிந்தது. பக்தர்களுக்கு வழங்குவதற்காகக் கூடுதல் பிரசாதங்களைக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.