தாமிரபரணி புஷ்கர விழாவில் புதிய சர்ச்சை! - ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்

முறப்பநாடு தமிரபரணி ஆற்றங்கரையில் நடைபெற இருக்கும் மகாபுஷ்கர விழாவை, தனியார் இடத்தில் நடத்த அனுதிக்கக் கூடாது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான சிவாலயப் பகுதியில் நடத்திட வேண்டும் என ஊர்மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், வரும் அக்டோபர்  11 முதல் 24 வரை தாமிரபரணி மகாபுஷ்கர விழா நடைபெற இருக்கிறது. 114 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதாகச் சொல்லப்படும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள், தாமிரபரணி மகாபுஷ்கர கமிட்டியால் செய்யப்பட்டு வருகின்றன. துாத்துக்குடியில், இந்த மகாபுஷ்கரம், முறப்பநாட்டில் உள்ள  கைலாசநாதர் சிவாலயத்தில் வைத்து நடைபெறும் என  விழா குழுவினர் தெரிவித்திருந்தனர். இதற்கான அனுமதி வேண்டி மாவட்ட நிர்வாகங்களிடம் மனு கொடுத்திருந்தனர்.  இந்த விழாவுக்காக அனுமதி வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் முறப்பநாடு ஊரைச் சேர்ந்த மக்கள், இன்று ஆட்சியர் அலுவலகம் வந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இதுகுறித்து ஊர் மக்கள் பேசுகையில்,``முறப்பநாடு பகுதியில், மகாபுஷ்கர  விழா வரும் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி 13 நாள்கள் நடைபெற உள்ளது. இதே பகுதியில் நவ கையாலங்களில் குரு ஸ்தலமான கைலாசநாதர் கோயிலும், சொக்கலிங்க சுவாமி கோயிலும் என இரண்டு கோயில்கள் உள்ளன. இந்தநிலையில், முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், இந்த மகா புஷ்கர விழாவை நடத்த நினைத்து, அங்கு ஒரு புதிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, கோயிலை உருவாக்க முயன்று வருகிறார்.

இதனால் விழாவின் புனிதம் கெடுவதுடன், தனியார் நிலத்தின் அருகில் உள்ள மற்ற விளை நிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, நடைபெற இருக்கும் புஷ்கர விழாவை முறப்பநாட்டில் உள்ள 2 சிவாலயங்களில் ஏதாவது ஒரு கோயிலில் நடத்திட வேண்டும்.  இந்த இரண்டு கோயிலைச் சுற்றிலுமே விழா நடத்துவதற்கான போதிய இட வசதி உள்ளது. ஏற்கெனவே இரு சிவாலயங்கள் உள்ள ஊரில், புதிய சிவாலயம் அமைப்பதை  தடை செய்யவும் வேண்டும்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!