`ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருக்கிறாரா?’ - உயர் நீதிமன்றம் கேள்வி

சொத்து வரிக்கணக்கு தொடர்பான வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை தெரிவிக்க, வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 1997-98-ம் ஆண்டு தன் சொத்து வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் மதிப்பு 4.67 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக வருமான வரித் துறை தீர்மானித்து  உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதாவுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மதிப்பு 3.83 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வழக்கை மீண்டும் மதிப்பீடு செய்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த வருமான வரித்துறை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மாற்றியமைத்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!