வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (10/09/2018)

கடைசி தொடர்பு:23:00 (10/09/2018)

வேலை பறிபோனதால் மனமுடைந்த இளைஞர்! - சாலையில் தீக்குளிப்பு

திருப்பூரில் வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் குமார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் இளைஞர் அருள்பிரகாஷ். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பெற்றோர் இல்லாததால் கடந்த 3 வருடங்களாகவே திருப்பூரில் தங்கி, துரித உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தான் பணியாற்றி வந்த உணவகத்தில் அவ்வப்போது திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் அருள்பிரகாஷ். இதையறிந்த உணவகத்தின் உரிமையாளர் பாஸ்கரும், அருள்பிரகாஷுக்கு பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உணவகத்தில் போதிய வருமானம் கிடைப்பதில்லை என்பதால், உணவகத்தை தான் மூடப்போவதாகக் கூறி, வேறு வேலையை தேடிக்கொள்ளுமாறு அருள்பிரகாஷிடம் அறிவுறுத்தியிருக்கிறார் உரிமையாளர் பாஸ்கர்.

கடந்த சில வருடங்களாக தங்கி வேலை பார்த்து வந்த உணவகத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால், அருள்பிரகாஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதியின் சாலையில் நின்று, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடலில் 90 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் அருள் பிரகாஷ் தற்போது உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.