`வீடியோவில் இருப்பது நான் இல்லை' - கோகுல்ராஜ் வழக்கில் பின்வாங்குகிறாரா ஸ்வாதி; ரகசிய விசாரணையில் நடந்தது என்ன?

அர்த்தாநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி காட்சியில் இருப்பது நான் இல்லை. கோகுல்ராஜை நான் காதலிக்கவில்லை என்று ஸ்வாதி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோகுல்ராஜ் கல்லூரியில் என்னோடு படித்தார். மற்றபடி அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அந்தக் கோயிலுக்கு இதுவரை போனதில்லை. கோயில் சிசிடிவி கேமராவில் இருப்பது நான் இல்லை'' என்று கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான ஸ்வாதி நீதிமன்றத்தில் ரகசிய விசாரணையில் தெரிவித்திருப்பதாக நீதிமன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் வயது 23. இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அவரோடு கல்லூரியில் சக மாணவியாக படித்தவர் ஸ்வாதி. இவர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர். இருவரும் நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. கடந்த 23.6.2015-ம் தேதி திருச்செங்கோடு மலைக்கோயிலில் இருவரும் சாமி கும்பிட்டு உட்கார்ந்து இருக்கும்போது தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் கோகுல்ராஜை கடத்திச் சென்றனர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்டம் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இன்று இவ்வழக்கின் முக்கிய சாட்சியான ஸ்வாதியிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

முதலில் திருச்செங்கோடு மலைக்கோயில் சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி போட்டு காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் கோகுல்ராஜும், பெண் ஒருவரும் சாமி கும்பிட்டு விட்டு அமருவதும், பிறகு 7 பேர் வருவதும், கோகுல்ராஜை கடத்திச் செல்வதும் பதிவாகி இருக்கிறது.

இதுபற்றி அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டதற்கு ஸ்வாதி, ``இந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. நானும் கோகுல்ராஜும் ஒன்றாக படித்தோம். அப்போது தெரியும். அதற்குப் பிறகு கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது என்றும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுநாள் வரை அந்தக் கோவிலுக்கே போனதில்லை'' என்று சொன்னதோடு அதன் பிறகு கேட்ட அனைத்து கேள்விகளுக்கு இல்லை, தெரியாது என்பதையே தெரிவித்தார்'' என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!