``வேலைவாய்ப்பு வழங்கினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார சலுகை"- முதல்வர் அறிவிப்பு!

``தமிழ்நாட்டில், 200 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, நேரடியாக 2000 பேர் முதல் 4000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு 1.50 கோடி ரூபாய் வரை முதலீட்டு மானியமும், ஐந்து ஆண்டுகளுக்கு மின்சார வரிச் சலுகையும் வழங்கப்படும்"

தமிழகத்தில், புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கி, வேலைவாய்ப்பை வழங்குபவர்களுக்கு அதிகளவில் சலுகையும், ஊக்கத்தொகையும் வழங்குவதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கும் வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. 

வேலை வாய்ப்பு

நேற்று (10.09.2018), தலைமைச் செயலகத்தில், `தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2018' -யை முதல்வர் வெளியிட்டார். இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழ்நாட்டில் நிறைய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஏற்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2018 வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், புதிய தொழில் முனைவு நிறுவனங்களை அதிகளவில் ஏற்படுத்தவும், பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான தரமான பணியாளர்களையும், உள்கட்டமைப்பையும் உருவாக்கவும் அனைத்து வசதிகளையும் செய்துதர தமிழக அரசு தயாராக உள்ளது.  

சென்னையிலும், கோவையிலும் புதிய தொழில் முனைவு நிறுவனங்கள் உதவும் வகையில் பண்டகச் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே உள்ள தகவல் தொழில்நுட்பத்துடன் புதியதாக, அனிமேஷன், கேமிங் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தவும், ரீடெய்ல், உடல் நலம், சுகாதாரம் போன்ற துறைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்துகொள்ளவும் தமிழக அரசு உதவும். 

தமிழ்நாட்டில், 200 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, 2000 பேரிலிருந்து 6000  பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகளும், சலுகைகளும் வழங்கப்படும். 200 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, நேரடியாக 2000 பேர் முதல் 4000 பேர் வரை வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 1.50 கோடி ரூபாய் வரை முதலீட்டு மானியமும், ஐந்து ஆண்டுகளுக்கு மின்சார வரிச் சலுகையும் வழங்கப்படும். 

இதேபோன்ற சலுகை, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் ஊரகப்பகுதிகளிலும்  தொழில்நிறுவனங்களை அமைப்பவர்களுக்கும் வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!