வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (11/09/2018)

கடைசி தொடர்பு:11:03 (11/09/2018)

களக்காடு-முண்டந்துறையில் வனவிலங்குகளை கணக்கெடுக்க களமிறங்கின 29 குழுக்கள்!

நெல்லை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட விலங்குகளைக் கணக்கெடுக்கும் பணிகள் இன்று தொடங்கின. இதையொட்டி வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, கரடி, மான், மிளா, யானை, செந்நாய் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. இந்த விலங்குகளைக் கணக்கெடுக்கும் பணிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கின. வரும் 18-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ள இப்பணியில் தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்கின்றனர். 

இந்த ஆண்டு பரவலாக மழை பெய்து வனப்பகுதி செழிப்பாக இருப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வனப்பகுதியில் ஈரப்பதம் இருப்பதால் கால் தடங்களைச் சுலபமாகப் பதிவு செய்ய முடியும் எனவும் வனத்துறையினர் நம்புகிறார்கள். பாபநாசம் வனப்பகுதியில் 13 குழுக்களும், அம்பாசமுத்திரம், முண்டந்துறை வனப்பகுதிகளில் தலா 6 குழுக்களும் கடையம் வனப்பகுதியில் 4 குழுக்கள் என மொத்தம் 29 குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். 

இன்று தொடங்கியிருக்கும் கணக்கெடுப்பானது அடுத்த 3 நாள்களுக்கு நேர்கோட்டுப் பாதையில் ஊன் உண்ணிகள் பற்றிய தகவல்களை திரட்டும் பணி நடக்கிறது. அடுத்த 3 நாள்களுக்கு தாவர உண்ணிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 17 மற்றும் 18-ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் ஒட்டுமொத்தமாக 29 வனப்பகுதிகளிலும் கிடைத்த வனஉயிரினங்களின் தடயங்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன. 

வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவதால் களக்காடு மலையில் உள்ள நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்துடன், பாபநாசம் மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நடப்பதையொட்டி வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதியில் முகாமிட்டு கணக்கெடுப்புப் பணிகளை முறைப்படுத்தி வருகின்றனர்.