டி.எஸ்.பி மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு சம்மன்! குட்கா ஊழலில் இறுகும் சி.பி.ஐ-யின் பிடி

குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் ரயில்வே டி.எஸ்.பி மன்னர் மன்னன் மற்றும் காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

குட்கா

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான குட்கா போன்றவற்றை கள்ளச்சந்தையில் விற்க தமிழக காவல்துறையினர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்ற பலருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த வழக்கைக் கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். சி.பி.ஐ விசாரணையில் இருந்த வழக்கில் சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் குட்கா வியாபாரி மாதவராவ், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 4 நாள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, இன்று குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக மதுரை ரயில்வே டி.எஸ்.பி மன்னர் மன்னன் மற்றும் தூத்துக்குடி காவல் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. இருவரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக டி.எஸ்.பி மன்னர் மன்னன் செங்குன்றத்திலும், காவல் ஆய்வாளர் சம்பத் புழலிலும் பணியாற்றியபோதுதான் செங்குன்றத்தில் மாதவராவின் குட்கா குடோன் செயல்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இவரும் நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா விவகாரம் தொடர்பாக பல இடங்களில் நடைபெற்ற சி.பி.ஐ சோதனையின்போது மன்னர் மன்னன் மற்றும் சம்பத் ஆகிய இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் வீட்டிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் பேரிலேயே தற்போது இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!