`எங்களுக்கு அப்படி ஒன்றும் புகார் வரவில்லையே!' - விஜயபாஸ்கர் குறித்த கேள்விக்கு முதல்வர் பதில்

``மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தெளிவாக உள்ளது'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

குட்கா ஊழல் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது. தொடர் ரெய்டுகளால் அவருக்குச் சிக்கல் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதனை விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த குற்றச்சாட்டுக்குத்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``குற்றச்சாட்டு சொன்னவுடன் குற்றவாளி ஆகிவிட முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படுவார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுகூட குற்றச்சாட்டு வந்தபோது அவர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அப்போதும் நான் அமைச்சரவையில்தான் இருந்தேன். இந்த ஆட்சி சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. 

இந்த ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. ஆனால், அது எடுபடவில்லை. அதனால்தான் இந்த மாதிரி அமைச்சர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்கள். எந்தத் துறையிலும் ஊழல் நடந்ததாக எங்களுக்குப் புகார் வரவில்லை. அப்படி வந்தால் சட்டப்படி அதைச் சந்திப்போம். தி.மு.க ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. அது விரைவில் வெளியில் வரும். தேர்தலுக்குப் பணம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம். இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் அ.தி.மு.க இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. சி.பி.ஐ ரெய்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என தம்பிதுரை கூறியது அவருடைய கருத்து. அரசின் கருத்து கிடையாது. பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!