`தி.மு.க-வுக்கு அழகிரி; தினகரனுக்கு ஓ.பி.எஸ்!' - இடைத்தேர்தலுக்கு நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி

` நவம்பரில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும்போது, தமிழகத்திலும் இடைத்தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்' என்றார் எடப்பாடி பழனிசாமி.

`தி.மு.க-வுக்கு அழகிரி; தினகரனுக்கு ஓ.பி.எஸ்!' - இடைத்தேர்தலுக்கு நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'தெலங்கானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும்போது, இங்கு இடைத்தேர்தல் நடக்கும். அந்த நேரத்தில், பா.ஜ.கவோடு நமக்கு சுமுகமான உறவு இருப்பதற்கு வாய்ப்பில்லை' என அமைச்சர்களிடம் விவரித்திருக்கிறார் முதல்வர். 

நாமக்கல் ஆண்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை அலுவலகம், குட்கா ஊழல் என மத்திய அரசின் வருமான வரித்துறை, சி.பி.ஐ சோதனை என ஆளும்கட்சிக்கு நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதுதொடர்பாக, 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்' என அரசியல் கட்சிகள் வலியுறுத்தினாலும், ஆளும்கட்சி தரப்பில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. இன்று சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமியும், ' சோதனை நடத்தப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட முடியுமா... முதலில் குற்றத்தை நிரூபிக்கட்டும்' என விளக்கம் அளித்தார். 

``அ.தி.மு.க அரசுக்கு எதிராக மத்திய அரசின் நிறுவனங்கள் நடத்தும் ரெய்டுகளைப் பற்றி முதல்வர் அலுவலகம் கண்டுகொள்ளவில்லை. சொல்லப் போனால், இடைத்தேர்தலை நடத்துவது குறித்துத்தான் அமைச்சர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என விவரித்த அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவர், `` உள்ளாட்சித் தேர்தலை முதலில் சந்திப்பதைவிட, இடைத்தேர்தலை சந்தித்துவிடும் முடிவில் முதல்வர் இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, ' தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி என்பது 234 தொகுதிகளுக்கும் பொருந்தாது என்பதை நிரூபிப்பதற்கு இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். ஆர்.கே.நகரில் 27 சதவிகித வாக்குகளோடு இரண்டாவது இடம் வந்தோம். இந்த வாக்குகள் அனைத்தும் தினகரனுக்கு எதிரானவை. சரியோ, தவறோ அந்தத் தொகுதிக்குள் அவர் முக்கியத்துவத்தைப் பெற்றுவிட்டார். அங்கு முதலில் அவருக்காக நாம் பிரசாரம் செய்தோம். அதன்பிறகு அவர் கைதானார். அவருடைய குடும்பப் பிரச்னைகள் எல்லாம் பிளஸ்ஸாக மாறிவிட்டன.

அழகிரிதொகுதிக்குள் கடும் போட்டியிருந்தும் 27 சதவிகிதம் வாங்கிய நம்மால், திருப்பரங்குன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட முடியும். அங்கு தினகரன் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை. திருப்பரங்குன்றம் தேர்தலும் ஓரளவுக்கு அழகிரிக்கு மையப்படுத்தித்தான் நடக்கும். இதனால், அங்கு தி.மு.க பலவீனப்படும். கடைசியாக நடந்த இடைத்தேர்தலில்,  38 சதவிகித வாக்குகளை வாங்கியிருந்தார் தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணன். இந்த வாக்குகள் அனைத்தும் அழகிரியால் பிளவுபடுவது நமக்கு சாதகமாக அமையும். அதேபோல், திருவாரூரிலும் அழகிரி பக்கம் தி.மு.க வாக்குகள் பிரியக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். எனவே, நவம்பரில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும்போது, தமிழகத்திலும் இடைத்தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்' என்றார். இதையடுத்து, இந்த இரண்டு தொகுதிகளிலும் சமூகரீதியான வாக்குகளைப் பெறுவது தொடர்பாக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். 

இதுதொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ` தினகரனுக்குச் சொந்த சமூகத்துக்குள்தான் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. உங்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். திருவாரூரில் உள்ள பத்து சதவிகித முக்குலத்தோர் வாக்குகளும் அ.தி.மு.கவுக்குத்தான் வந்துசேர வேண்டும். தினகரனால் அ.தி.மு.கவுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது. திருப்பரங்குன்றத்தில் 22 சதவிகித முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. இதில், பன்னீர்செல்வத்தின் சமூக வாக்குகள் அனைத்தும் நமக்கு வந்து சேரும். செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்கள் கள்ளர் சமூக வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்' என்றவர்,

'இடைத்தேர்தல் காலத்தில் நமக்கும் பா.ஜ.கவுக்கும் நல்ல உறவு இருக்காது. பா.ஜ.கவுக்கு கையாளாக இருக்கிறோம் என்ற காரணத்தால்தான், ஆர்.கே.நகரில் உள்ள கிறிஸ்துவ-முஸ்லிம் வாக்குகள் நமக்கு வந்து சேரவில்லை. இடைத்தேர்தல் காலத்தில் பா.ஜ.க எதிர்ப்பு அரசியல்தான் நடத்துவோம். எனவே, முத்தலாக் விவகாரத்தில் பா.ஜ.க முடிவுக்கு எதிராக நாம் இருந்தோம் என்பதை சிறுபான்மையினர் மத்தியில் கொண்டு செல்லுங்கள். எடப்பாடி யார் என்பதை இந்தத் தேர்தல் காட்டும்' என அமைச்சர் நிலோபர் கபிலிடமும் அன்வர்ராஜாவிடமும் கூறியிருக்கிறார். எனவே, இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டார் முதல்வர்" என்றார் விரிவாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!