தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை... `சுதந்திர தேவி' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த குழுவினர்!

தஞ்சாவூரில் சுந்ததிர தினத்தன்று பிறந்து 5  நாள்களே ஆன பச்சிளம் பெண்  குழந்தை ஒன்று  ஆதரவற்று கிடந்தது. குழந்தைகள் நல குழுவினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததோடு `சுதந்திர தேவி' எனப் பெயரிட்டு பாதுகாத்து வந்தனர். இப்போது சுதந்திர தேவியை தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்திருக்கிறது. `அழுகையோடு கையில் கிடைத்த குழந்தை சிரித்தபடி சுதந்திரமாகச் சென்றது' என நெகிழ்ச்சி பொங்க கூறுகிறார்கள் குழந்தைகள் நல குழுவை சேர்ந்தவர்கள்.

பெண் குழந்தை சுதந்திர தேவி

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே உள்ள  புதரில் பிறந்து 5  நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சைல்டு லைனுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து, அந்தக் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்தக் குழந்தையை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை  அளிக்கப்பட்டதோடு டாக்டர்கள்  செய்த பரிசோதனையில் அந்தக் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருப்பதும் தெரியவந்தது. குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் ஒரு மாதமாகத் தொடர் சிகிச்சை அளிக்கபட்ட பின்னர், குழந்தை தேறியது. உடல் எடையும் அதிகரித்து ஆரோக்கியத்துடன் இருக்கும் அந்தக் குழந்தைக்கு குழந்தைகள் நல குழுவினர், `சுதந்திரதேவி' எனப் பெயர் வைத்து பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் அரியலூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தையைத் தத்தெடுக்க முன்வர முறைப்படி சுதந்திர தேவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

இது குறித்து குழந்தைகள் நல குழுத்தலைவர் திலகவதியிடம் பேசினோம். `எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தப் பச்சிளம் பெண் குழந்தை தூக்கி வீசப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் சைல்டு லைனுக்கு வர அவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தினார்கள். தொடர் அழுகையால் வீங்கியிருந்தது அந்த குழந்தையின் முகம். உடல் எடை வேறு மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுப்பதற்காக அனுமதித்தோம். தீவிர சிகிச்சையால் குழந்தை உடல் மெள்ள கூடியதோடு ஆரோக்கியமாகவும் இருந்த குழந்தை அழுகையை மறந்து மெள்ள சிரிக்கத் தொடங்கி கை கால்களையும் ஆட்டியது. சுதந்திர தினத்தில் கிடைத்ததால் குழந்தைக்கு சுதந்திர தேவி எனப் பெயர் வைத்தேன். பின்னர், அரியலூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று சுதந்திர தேவியைத் தத்தெடுக்க முன்வர முறைப்படி அவர்களிடம் சுதந்திரதேவியை ஒப்படைத்தது மாவட்ட நிர்வாகம். அழுகையோடு வந்த சுதந்திர தேவி சுதந்திரமாகச் சிரித்தபடி அவர்களுடன் சென்றாள். குழந்தைகள் நல குழு, அடிக்கடி தொண்டு நிறுவனத்துக்குச் சென்று  சுந்தந்திர தேவி நல்ல முறையில் வளர்க்கபடுகிறாளா , ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கும்'' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!