`இவரை நம்பி அனுப்ப மாட்டோம்!’ - கொந்தளித்த பெற்றோர்கள்; கேந்திரிய பள்ளி முதல்வர் டிஸ்மிஸ் | Tiruvannamalai kendriya vidyalaya school principal dismissed over sexual harassment issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (11/09/2018)

கடைசி தொடர்பு:17:29 (11/09/2018)

`இவரை நம்பி அனுப்ப மாட்டோம்!’ - கொந்தளித்த பெற்றோர்கள்; கேந்திரிய பள்ளி முதல்வர் டிஸ்மிஸ்

பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் குமார் தாக்கூரை பணியிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

கேந்திரிய பள்ளி முதல்வர்

பெங்களூரில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், குமார் தாக்கூர் முதல்வராகப் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவு செய்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தார். இதையடுத்து, குமார் தாக்கூர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் கேந்திரிய வித்யாலயா ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. அப்போது, பள்ளியில் படித்த பல மாணவிகளும் ஆசிரியர்களும் அவர் மீது புகார் அளித்தனர். இந்தப் பிரச்னையை முடக்குவதற்கு தற்காலிக இடைநீக்கம் செய்தது. அதன் பின் அவரை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றுவதாக அந்தக் கமிட்டி முடிவு செய்தது. இந்தச் சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. அதன் பின்பு குமார் தாக்கூர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அங்கும் அவர் மீது சர்ச்சை எழவே கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திருவண்ணாமலைக்கு குமார் தாக்கூர் மாற்றப்பட்டார்.

திருவண்ணாமலையில் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அச்சம் அடைந்தனர். `பாலியல் புகாருக்கு உள்ளாகி போக்ஸோ வழக்கு இருக்கும் ஒரு முதல்வரை எப்படி பணியில் அமர்த்தலாம்' என்று கேள்வி எழுப்பியதோடு, `இந்த முதல்வரை நம்பி நாங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடமும் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் சங்கரிடமும் முறையிட்டனர்.

அதன் பின் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் சங்கர் முன்னிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டனர். அதன் நடவடிக்கையாகத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, கேந்திரிய வித்யாலயா தலைமைக்குத் தகவலை கொடுத்துவிட்டு முதல்வர் குமார் தாக்கூரை பணியிலிருந்து விடுவித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். பணி நீக்கத்துக்கான உத்தரவு நகலை கேந்திரிய வித்யாலயா தலைமைக்கு அனுப்பினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க