வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (11/09/2018)

கடைசி தொடர்பு:17:50 (11/09/2018)

விஜயபாஸ்கர் குறித்து முதல்வர் பேச மறுப்பது ஏன்? - காரணம் சொல்லும் துரைமுருகன்

”அமைச்சர் விஜயபாஸ்கரை  குற்றவாளி என முதல்வர் சொல்லிவிட்டால், அவர்மீது  விஜயபாஸ்கரும் குற்றம் சாட்டுவார் எனப் பயந்தே எடப்பாடியார் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்” என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துரைமுருகன்

நெல்லை மாவட்டம், தென்காசியில் நடைபெற உள்ள தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் பொருளாளர் துரைமுருகன், தூத்துக்குடிக்கு விமானம்மூலம் வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஊழல் புகாரில் தொடர்ந்து அமைச்சர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுதொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. ”சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கில் குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என நிரூபணம் ஆகவில்லை” என சேலத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியுள்ளார். அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரை குற்றவாளி என முதல்வர் சொல்லிவிட்டால், அவர்மீது  விஜயபாஸ்கரும் குற்றம் சாட்டுவார் எனப் பயந்தே எடப்பாடியார் வெளிப்படையாக பேச மறுக்கிறார் என நினைக்கிறேன்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்பதே அனைவரின் கருத்து. காங்கிரஸின் கருத்து தற்போது தேவையற்றது. பா.ஜ.க கூட்டணிக்காக தி.மு.க ஏங்கிக்கொண்டிருக்கிறது என தம்பிதுரை கூறுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இனி வரும் தேர்தல்களில், தி.மு.க பிரகாசமாக வெற்றிபெறும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க