`அனுபவித்த சித்ரவதை போதும்; இனியும் தாமதிக்கக் கூடாது’ - 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு கோரிக்கை

``பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் அனுபவிக்க வேண்டிய சித்ரவதைகள் எல்லாவற்றையும் சிறையிலேயே அனுபவித்துவிட்டார்கள். இனியும் தாமதிக்கக் கூடாது'' என்று வலியுறுத்தி அரியலூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                                        7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு சில நாள்களுக்கு முன் பரிந்துரை செய்தது. இந்தநிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய தாமதப்படுத்தும் ஆளுநரை கண்டித்தும் விரைவில் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

                             வக்கீல்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேசினோம். “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை முடிவுசெய்யும் அதிகாரம், தமிழ்நாடு அரசுக்கு உள்ளதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் இதை அரசியலாக்கும் முயற்சி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் அனுபவிக்க வேண்டிய சித்ரவதைகள் எல்லாவற்றையும் சிறையிலேயே அனுபவத்துவிட்டார்கள். இனியும் தாமதிக்கக் கூடாது. உடனே ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்'' என்று எச்சரித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!