``ஆளுநர் அவர்களே... கோட்சே விடுதலையை எண்ணிப்பாருங்கள்..!'' மணியரசன்

``ஆளுநர் அவர்களே...  கோட்சே விடுதலையை எண்ணிப்பாருங்கள்..!'' மணியரசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது, கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகள் அமைப்பின் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் பூந்தமல்லி தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. மேலும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 2000-வது ஆண்டில், நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை பரிசீலித்த குடியரசுத் தலைவர், அதன் மீது முடிவு எடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு செய்தனர். அவர்கள் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சுமார் 27 ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவையின் இந்த முடிவு, தமிழக ஆளுநருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

`இந்த விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுப்பாரா? மத்திய அரசிடம் கருத்து கேட்பாரா?' என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கெனவே, தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் திரும்பவும் தண்டனை குறைப்புக் கொடுக்க முடியுமா. தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வாரா அல்லது திருத்தங்கள் செய்யச் சொல்லி திருப்பி அனுப்புவாரா எனப் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.

ராஜிவ்காந்தி

இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறுகையில், ``பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதென்று தமிழ்நாடு அமைச்சரவை 09.09.2018 அன்று முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்பது பாராட்டத்தக்க செயல். சட்ட வல்லுநர்களின் கருத்துகளை ஆளுநர் கேட்பது ஒரு பக்கம் இருந்தாலும், `மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேவை 14 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்த நிலையில், அன்றைய மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு விடுதலை செய்தது' என்ற முன்னெடுத்துக்காட்டை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனெனில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன்படி, சிறைக் கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்குத் தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்பதை தொடர்ச்சியாகப் பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில், 1981-ல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அமர்வு, இரண்டு செய்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒன்று, மாநில அரசுக்கு 161-ன் படி உள்ள அதிகாரம் தங்கு தடையற்றது. அது நடுவண் அரசின் அனுமதிக்கோ, ஆய்வுக்கோ உட்பட்டதல்ல. அந்த 161-ஐப் பயன்படுத்தி ஒரு தடவை தண்டனைக் குறைப்புச் செய்தால், இரண்டாம் தடவை தண்டனைக் குறைப்போ விடுதலையோ செய்யக் கூடாது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து, அரசமைப்புச் சட்டம் ஒரு தடவைதான் தண்டனை குறைப்பு செய்ய வேண்டுமென வரம்பு விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. மாரூராம் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனை குறைக்கப்பட்டு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரமிருக்கிறது என்று தீர்ப்பளித்தது.

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்

இப்போது பேரறிவாளன் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனை நீக்கப்பட்ட நிலையில், மறுபடியும் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியுமா என்றால், முடியும் என்பதைத்தான் மேற்படி கிருஷ்ணய்யர் தீர்ப்பு உறுதி செய்கிறது. 2014-ம் ஆண்டு அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு மாநில அரசுக்கு 161-ன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பாதிக்கும் வகையில் எந்தக் கருத்தும் கூறவில்லை. தீர்ப்பும் வழங்கவில்லை. நீதிபதி சதாசிவம் அமர்வின் பரிந்துரைப்படி இவ்வழக்குக்காக அமைக்கப்பட்ட நீதிபதி கலிபுல்லா தலைமையிலான அரசமைப்பு அமர்வு, 2015 டிசம்பர் 2-ல் வழங்கிய தீர்ப்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, நடுவண் அரசின் காவல்துறை போட்ட வழக்கில் மாநில அரசு தண்டனைக் குறைப்போ, விடுதலையோ செய்ய வேண்டுமானால் நடுவண் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டுமெனக் கூறியது. அதேவேளை, மாநில அரசுக்கு தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலை செய்யும் அதிகாரம் 161-ன்கீழ் உள்ள தங்கு தடையற்றது (Unfettered) என்று கூறியது.

இப்போது, நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு, பேரறிவாளன் மனு மீது அளித்த தீர்ப்பில், மாநில அரசு 161-ன் கீழ் முடிவெடுக்க (அதாவது விடுதலை செய்ய) தடை ஏதுமில்லை என்று 07.09.2018 அன்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் மேற்படி 7 தமிழர்கள் மீதான குற்றச்சாட்டு ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை என்பது இவ்வழக்கில் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய கே.டி. தாமஸ் அவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம். தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின் மீது மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய நிலை இல்லை. ஆளுநர் இந்திய அரசின் கருத்துக்கேட்பு நடைமுறையில் இறங்கக் கூடாது. மேலே, எடுத்துக்காட்டப்பட்டுள்ள கோபால் கோட்சே விடுதலை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலும் அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை எந்தக் காலத்தாழ்வுமின்றி உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்றார். 

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!