ஒப்பந்தம் ஓகே!- `ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் இணைந்தது தமிழக அரசு

சென்னைத் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

ஏற்கெனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1.57 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 1027 சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரையிலான காப்பீடும், 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீடும் வழங்கப்படுகிறது.  

``மத்திய அரசின் திட்டத்துடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டினையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்திலுள்ள 77 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையைப் பெற முடியும். ஏற்கெனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படாதவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்கப்படும்" என்று கூட்ட முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதிபெறாத ஆனால், மத்திய அரசு திட்டத்துக்கு அடிப்படையான பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்புப் புள்ளிவிவரப்படி (SECC) தகுதியுள்ள நபர்களுக்கும் இனி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!