`கத்தை கத்தையா பணம்' - லஞ்ச ஒழிப்பு போலீஸைப் பதறவைத்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ வீட்டு ரெய்டு | DAVC officials seized lakhs of rupees and gold ornaments from RTO's Cuddalore house

வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (11/09/2018)

கடைசி தொடர்பு:19:21 (11/09/2018)

`கத்தை கத்தையா பணம்' - லஞ்ச ஒழிப்பு போலீஸைப் பதறவைத்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ வீட்டு ரெய்டு

லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

பாபு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் பாபு. முத்துக்குமார் என்பவரின் வாகனத்துக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்க ரூ.25,000 லஞ்சம் வாங்கியபோது பாபு, அவருடைய உதவியாளர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்

மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீடு, கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தௌலத் நகரில் உள்ளது. இங்கு கோடிக்கணக்கில் நகை, பணம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருமால் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பாபுவின் வீட்டில் சோதனை

அப்போது, அங்கு கோடிக்கணக்கில் மதிப்புடைய பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் பிடிப்பட்டன. இதையடுத்து பணம் எண்ணுவதற்கு இயந்திரமும், நகைகளை மதிப்பிட நகை மதிப்பீட்டாளரும் வரவழைக்கப்பட்டு நகை, பணம் எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி ரூ.35 லட்சம் பணமும், 250 பவுன் நகைகளும் சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள வீடுகளின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாபுவின் வீட்டில் சோதனை

தொடர்ந்து நகை, பணம் எண்ணும் பணிகள் நடந்து வருகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் கோடிக்கணக்கில் மதிப்புடைய நகை, பணம் பிடிப்பட்டுள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.