வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/09/2018)

கடைசி தொடர்பு:22:00 (11/09/2018)

காதல் கணவர் மீது சந்தேகம்! - திருப்பூரில் குழந்தையைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற மனைவி

தமிழிசக்கி

திருப்பூர் அருகே சாமளாபுரம் பகுதியில் வசித்து வருகிறார்கள் நாகராஜ் - தமிழிசக்கி தம்பதியர். இதில் நாகராஜ் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், அவரது மனைவி தமிழிசக்கி பின்னலாடை நிறுவனமொன்றில் கூலித்தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர். இத்தம்பதியரின் இரண்டரை வயது மகளான சுகன்யாஸ்ரீ வீட்டிலிருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தம்பதி இருவரும் சோமனூர் சந்தைக்குப் பொருள்கள் வாங்கச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அதன்பிறகு தமிழிசக்கி வீட்டில் குழந்தையுடன் இருக்க, நாகராஜ் தனது நண்பரைக் காண வெளியே சென்றிருக்கிறார். பின்னர் சில மணி நேரம் கழித்து இரவு வீடு திரும்பிய நாகராஜுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அன்று இரவு வீட்டுக்குள் அவரது மனைவி தமிழிசக்கி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பதறியடித்துபோய் மனைவியை எழுப்பிய நாகராஜ், என்ன நடந்தது என்று அவரிடம் விசாரித்தபோது, ``அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் புகுந்து தன்னைத் தாக்கிவிட்டுச் சென்றதாகவும், அதனால்தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் தமிழிசக்கி. அதனையடுத்து இருவரும் சேர்ந்து குழந்தையைத் தேடியபோது, வீட்டின் ஓரத்தில் தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டிரம் ஒன்றின் அருகில் முழுவதுமாக நனைந்தபடி குழந்தை சுகன்யாஸ்ரீ கிடந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு இருவரும் ஓடியிருக்கிறார்கள். ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

தம்பதியிடம் நேற்றிலிருந்து நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நாகராஜ் - தமிழிசக்கி தம்பதியரிடையே சமீபகாலமாக அடிக்கடி மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நாகராஜ் அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்ததுதான் காரணமென்றும் கூறப்படுகிறது. தமிழிசக்கியும் அதை பலமுறை கண்டித்தும்கூட நாகராஜ் போனில் பேசுவது தொடர்ந்துகொண்டே இருந்ததால், மனமுடைந்த தமிழிசக்கி, இறுதியாகத் தன்னுடைய குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார். 

இந்நிலையில் கடந்த 9- ம் தேதி இருவரும் சோமனூர் சந்தைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வேளையில், நாகராஜ் தன் நண்பரைக் காண வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, தமிழிசக்கி தன் மகளை வீட்டில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார். அத்துடன் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றபோது, திடீரென கணவர் வீடு திரும்பியதால் அப்படியே கீழே விழுந்து மயங்கியவாறு நடித்திருக்கிறார் தமிழிசக்கி. பின்னர் காவல்துறையினர் தோண்டித் துருவி விசாரித்ததில், குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதைத் தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறார் தமிழிசக்கி. அதன்பிறகு காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.