வெளியிடப்பட்ட நேரம்: 00:49 (12/09/2018)

கடைசி தொடர்பு:00:49 (12/09/2018)

ஆளும் கட்சிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கும் செந்தில் பாலாஜி..!

ஆளும் அரசை எதிர்த்து தனது தொகுதியான அரவக்குறிச்சியில் மூன்று இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து பரபரப்பை பற்றி வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

செந்தில் பாலாஜி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள், 'அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தலின்போது,  பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க சென்றபோது செந்தில்பாலாஜியிடம் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற அவர் முயன்று வருகிறார். ஆனால், இந்த அரசும், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அரவக்குறிச்சி தொகுதிக்கு எந்தத் திட்டங்களையும் வரவிடாமல் தடுத்து வருகிறார்கள் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனது தொகுதி மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தார்.

ஆனால், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அரவக்குறிச்சி தொகுதி மக்கள் தன்னிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் மூன்று இடங்களில் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருக்கிறார். வரும் 20-ம் தேதி அரவக்குறிச்சி தாலுக்கா அலுவலகம் முன்பும், 25 ம் தேதி க.பரமத்தி கடைவீதி அருகிலும், 27-ம் தேதி வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகிலும் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருக்கிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடே உற்றுப் பார்க்கும் விசயமாக மாற்றி, தனது தொகுதிக்கு எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசு, தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர்ன்னு பலரையும் நாறடிக்க இருக்கிறார். இந்த உண்ணாவிரதம் ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் பேரை திரட்டி பிரமாண்டம் காட்டும் ஏற்பாட்டில் மும்முரமாகி இருக்கிறார் செந்தில்பாலாஜி" என்றார்கள். 

இதுகுறித்து தெரிவித்த அ.தி.மு.க நிர்வாகிகள், "செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருப்பதெல்லாம் சரி. அதற்கு போலீஸாரின் அனுமதி கிடைக்கனுமில்ல. கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இந்த உண்ணாவிரதங்களுக்கு அனுமதி தர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறைக்கு பிரஷர் கொடுக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துறது கஷ்டம்தான்" என்றார்கள்.