வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (12/09/2018)

கடைசி தொடர்பு:21:00 (12/09/2018)

தமிழகத்தைத் தலைநிமிரச் செய்யுமா அரசின் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை...?

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை பற்றிய கட்டுரை...

தமிழகத்தைத் தலைநிமிரச் செய்யுமா அரசின் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை...?

மிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஜெயலலிதா வழியில் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்று கொண்டிருப்பதாக, மேடைதோறும் பேசிக்கொண்டிருக்கிறார். மத்திய பி.ஜே.பி. அரசுடன் இணக்கம் காட்டி, தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெறுவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இந்த நிலையில், சென்னைத் தலைமைச் செயலத்தில் கடந்த திங்கட்கிழமை (செப் 10), முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்துக்கான புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை-2018-ஐ வெளியிட்டுள்ளார். இதில், பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசின் இந்தக் கொள்கையை வரவேற்பதாகவும் முதலீட்டாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையானது, அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு நின்றுவிடாமல், அறிவாற்றல் சார்ந்த முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடும், நகர்ப்புறங்களில் அனைத்து வளர்ச்சிகளையும் மேம்படுத்தும் உயரிய எண்ணத்தோடும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், உலகத்தரம் வாய்ந்த மனிதவளத்தை உறுதிசெய்வது, தமிழகத்தில் ஐ.டி. தொழில் பிரிவினரின் வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்குவது போன்றவையும் அந்தக் கொள்கையில் இலக்குகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. தொழில் பிரிவுக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு அளிப்பது மட்டுமன்றி, அந்தத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு விரிவான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான யுக்திகளையும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, அனிமேஷன், டிஜிட்டல் விளையாட்டுத் துறையில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் எல்காட் நிறுவனம் சார்பில் ஐ.டி. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கவும் அந்தக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில் தொடங்குவதற்கான உதவிகள் வழங்கிடும் வகையிலும் இப்புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இரவுநேரப் பணியில் பணிபுரிய வாய்ப்பும், கூடவே தகுந்த பாதுகாப்பும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பம்சங்கள் அந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாடு, தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை

``தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை - 2018-ஐப் பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது செய்யாததை, அவர் வழிவந்த இந்த அரசு செய்திருக்கிறது" என்று பாராட்டுப் பத்திரம் வழங்குகின்றனர், துறைசார்ந்த பல முதலீட்டாளர்கள்.

இதுகுறித்து இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் எம்.பொன்னுசாமி, ``தமிழக அரசைப் பொறுத்தவரை, அதிக அளவு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழில் துறையைப் பொறுத்தமட்டில், முதலீட்டைப் பெரு நிறுவனங்களுக்கானவை என்றும், சிறு நிறுவனங்களுக்கானவை என்றும் வகைப்படுத்தியுள்ளது. இதுபோன்று பல துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர, தற்போது சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் அரசுத் தரப்பில் முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் கொள்கைகளைக் காட்டிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள கொள்கையில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்'' என்றார்.

கோவை மாவட்டச் சிறு தொழிலதிபர்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி, ``சிறுதொழில் நிறுவனங்களுக்குத் தற்போதைய சூழல் சிறப்பாக உள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி. வரியால், சிறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாடு விதிமுறைகள் மூலம் பெரிய பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றன'' என்றார். 

தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை - 2018-ன் இலக்குகளால், தமிழகம் முன்னேற்றமடைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்