`ரஜினியைச் சந்தித்த திருமாவளவன், திருநாவுக்கரசர்!' - `கலகல' கராத்தே தியாகராஜன் #VikatanExclusive | Thirumavalavan, Thirunavukkarsar met Rajini says Karate Thyagarajan

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (12/09/2018)

கடைசி தொடர்பு:11:38 (12/09/2018)

`ரஜினியைச் சந்தித்த திருமாவளவன், திருநாவுக்கரசர்!' - `கலகல' கராத்தே தியாகராஜன் #VikatanExclusive

ரஜினி அனைவருக்கும் நண்பராக இருப்பார். தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடுவார்.

`ரஜினியைச் சந்தித்த திருமாவளவன், திருநாவுக்கரசர்!' - `கலகல' கராத்தே தியாகராஜன் #VikatanExclusive

தி.மு.கவுக்கு எதிராக தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் முன்வைத்த கருத்துகள், அறிவாலயத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. `நாங்கள் ஓர் அகில இந்திய கட்சி. நாங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு உரிய கௌரவத்தை தி.மு.க அளிக்க வேண்டும்' எனவும் கொந்தளிக்கிறார் கராத்தே. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நேற்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தார் ராகுல்காந்தி. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தில் தி.மு.கவினரின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இல்லை. இதை நேரடியாக மேடையில் விமர்சித்துப் பேசினார் கராத்தே தியாகராஜன். அவருடைய பேச்சுக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

கராத்தே தியாகராஜனிடம் பேசினோம். 

`எங்கள் போராட்டங்களில் தி.மு.க-வின் பிரதிநிதிகளாக உள்ளூர் எம்.எல்.ஏ-வோ மாவட்டச் செயலாளர்களோ பங்கேற்பதில்லை' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினீர்கள். அப்படியென்ன நடந்துவிட்டது? 

``பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக, ராகுல்காந்தி அறிவித்த பந்த் இது. பந்த் தொடர்பாக நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினோம். இதேபோன்ற கூட்டம் அறிவாலயத்தில் நடந்தால் திருநாவுக்கரசர் போவார் அல்லது சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி போவார். அவரும் இல்லாவிட்டால், முன்னாள் தலைவர்கள் தங்கபாலுவோ கிருஷ்ணசாமியோ போவார்கள். ஆனால், நாங்கள் நடத்திய கூட்டத்தில் சட்டத் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜனை அனுப்பி வைத்திருந்தனர். இப்படியொரு கூட்டத்துக்கு துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்களில் ஒருவர் வருவதுதான் சரியாக இருக்கும். ' அன்று எங்கள் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் இருந்தது' என்றார்கள். அவர்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டோம். நேற்று சேப்பாக்கத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் கிரிராஜனையே அனுப்பி வைத்திருந்தனர். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் வரவில்லை. தி.மு.க-வின் பகுதிச் செயலாளரும் வரவில்லை. வட்டச் செயலாளரும் கலந்து கொள்ளவில்லை. சென்னை மாநகரத்தில் உள்ள நான்கு மாவட்டச் செயலாளர்களும் வரவில்லை. வடசென்னையிலிருந்து சிலரை அழைத்து வந்திருந்தார் கிரிராஜன். நாங்கள் ஓர் அகில இந்திய கட்சி. எங்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்கிறோம். வேறு எதுவுமில்லை. கட்சிக்குள் பேசப்பட்ட விஷயங்களைத்தான் நான் மேடையில் பிரதிபலித்தேன்". 

ஒருவேளை, திருநாவுக்கரசர் தலைவராக இருப்பதை தி.மு.க தலைமை விரும்பவில்லையா? 

``என்னவென்று தெரியவில்லை. நேற்று காலை 10 மணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் நடத்தினார்கள். 4 மணிக்கு வி.சி.க போராட்டம் நடத்தியது. 5 மணிக்கு திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த மூன்று கட்சிகளுமே தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பவை. இன்று காலைகூட சி.பி.ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகி என்னிடம் பேசும்போது, `தி.மு.க நிர்வாகிகள் யாரும் சொல்லிக் கொள்ளும்படியாக வந்து கலந்துகொள்ளவில்லை' என்றார். வி.சி.க கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகுதான், சேப்பாக்கம் கூட்டத்துக்கே வந்தார் திருநாவுக்கரசர். வி.சி.க கூட்டத்திலும் தி.மு.க-வின் மாவட்டப் பொருளாளர் கென்னடி என்பவர்தான் கலந்துகொண்டார். திருநாவுக்கரசர் மேல் கோபம் என்றால், வி.சி.க மீதும் தி.மு.க-வுக்குக் கோபமா? ஒரே புரியாத புதிராக இருக்கிறது. தி.மு.க-வின் தொழிற்சங்கமான தொ.மு.ச-வும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை".

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மாற்றம் வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறதே? 

``எனக்குத் தெரிந்து மாற்றம் வரும் என்று தெரியவில்லை". 

நடிகர் ரஜினிகாந்தின் `காலா' படம் பார்த்த பிறகு நீங்கள் வெளியிட்ட அறிக்கை அரசியல்ரீதியானது. குறிப்பாக ஸ்டாலினை மையப்படுத்தியே நீங்கள் விமர்சனம் செய்திருந்தீர்களே? 

``யாரையும் குறிப்பிட்டு அறிக்கையில் சொல்லவில்லை. ரஜினி ஒரு பெரிய நடிகராக இருக்கிறார். இங்கு மிகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையில் தமிழக அரசியல் இருக்கும் என நம்புகிறேன்". 

கராத்தே தியாகராஜன்

ரஜினியின் நெருங்கிய நண்பராக இருக்கிறீர்கள். புதிய கட்சியின் பெயரை அவர் எப்போது அறிவிப்பார்? 

``பூத் அளவில் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. மக்கள் மன்றத்தின் சட்டதிட்டங்களை ஏறக்குறைய அவர் நிறைவு செய்துவிட்டார். மக்களோடு இணைந்து செயல்படும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். அவர் நிச்சயம் கட்சியைத் தொடங்குவார். அரசியலில் மிகப் பெரிய ஆளுமையாக இருப்பார். அரசியல்ரீதியாக நிறைய பேர் அவரைச் சந்தித்துப் பேசி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அவரைச் சந்தித்துப் பேசினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரவிக்குமாருடன் சென்று ரஜினியைச் சந்தித்தார் திருமா. இந்தச் சந்திப்பு வெளியில் வரவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநாவுக்கரசரும் ரஜினியைச் சந்தித்துப் பேசினார்". 

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களைச் சொல்ல முடியுமா? 

``அரசியல்தான் பேசினார்கள். வேறு என்ன பேசியிருக்க முடியும். `தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்' என ரஜினி நினைக்கிறார். கருணாநிதி இருந்த வரையில் அவர் அரசியலுக்கு வரவில்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே, ரஜினியின் ஆளுமை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவே, ரஜினிக்கு எழுதிய கடிதமும் இருக்கிறது. ஸ்டாலின் மேயராக இருக்கும்போது, ரஜினி படம் போட்டுத்தானே வாக்குக் கேட்டார்கள்". 

`டிசம்பருக்குள் கட்சி தொடங்குவார் ரஜினி' என்கிறார்களே? 

``நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் நிச்சயம் களமிறங்கிவிடுவார். நாடாளுமன்றத்துக்கு மட்டும் தேர்தல் வந்தால், டிசம்பருக்குள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என நினைக்கிறேன். இது என்னுடைய கருத்துதான். தனியாகத்தான் தேர்தலை எதிர்கொள்வார் ரஜினி. அவரே ஒருமுறை சொல்லியிருக்கிறார். `என்னுடைய முதல் நண்பர், ஒரு இஸ்லாமியர். போயஸ் கார்டன் வீடு கூட ஒரு முஸ்லிம் நண்பரிடம் இருந்துதான் வாங்கினேன். என்னுடைய மிகப் பெரிய ஹிட் படம், பாட்ஷா'  என்று. எனவே, அவர் அனைவருக்கும் நண்பராக இருப்பார். தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடுவார்".