வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (12/09/2018)

கடைசி தொடர்பு:12:00 (12/09/2018)

`அமைச்சரின் உறவுப் பெண்ணை மறந்துட்டு ஓடிடு'- இன்ஸ்பெக்டரால் கழுத்தை அறுத்துக்கொண்ட கரூர் காதலன்

கரூர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அடைக்கலம் தேடிய காதல் ஜோடியை சாதியைக் காரணம் காட்டி அமைச்சர் ஒருவரின் பிரஷரால் போலீஸார் பிரிக்க, மனமுடைந்த காதலன் கழுத்தறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோபிநாத்துடன் கோபிகா

கரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள ராமானுஜர் நகர் தெற்குப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் கோபிநாத். இவர் சேலத்தில் உள்ள தனியார் ஃபேக்டரியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கரூர் பாரதி நகர் எல்.ஜி.நகர் கோபிகாவும், கோபிநாத்தும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். கோபிகா ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி. இருவரும் வேறு வேறு  சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், கோபிகா வீட்டில் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. வேறு வழியில்லாத காதல் ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. இந்தநிலையில் பாதுகாப்பு கருதி நேற்று (11-09-18) மாலை கரூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தவர்களை போலீஸாரே பிரிக்க முயல்கையில், மனமுடைந்த கோபிநாத் போலீஸார், காதலிக்கு முன்பே கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரைத் தடுத்த உறவினர்கள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

கோபிநாத்திடமே பேசினோம். ``எனக்கு 24 வயது. கோபிகாவுக்கு 19 வயது. நாங்க 2 பேரும் மேஜர்தான். ஆனால், இருவரும் வேறு வேறு சாதி. சாதியைக் காரணம் காட்டி எங்க காதலை கோபிகா வீட்டில் கடுமையாக எதிர்த்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவுப் பெண் கோபிகா. அதனால், என்னைக் கோபிகாவை மறந்துவிடச் சொல்லி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தாங்க. காதலில் உறுதியாக இருந்த நாங்க, கோயிலில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டோம். ஆனால், மிரட்டல் தொடர்ந்தது. இதனால், பாதுகாப்பு கேட்டு நேற்று கரூர் காவல்நிலையத்துக்குப் போனோம். ஆனால், கரூர் நகரக் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ், `அமைச்சரின் உறவுப் பெண் கோபிகா. அதனால், அவரை மறந்துட்டு ஓடிடு. இல்லைன்னா, உன் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. பொய் கேஸ்ல உள்ளே போக வேண்டியிருக்கும். எப்படி வசதி'ன்னு எங்களைப் பிரிச்சார். அதனால், கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் தடுத்துவிட்டார்கள். என்ன ஆனாலும் பரவாயில்லை. என் காதல் மனைவியை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. எனக்கு ஏதாவது நடந்தால் அதுக்கும் காரணம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் காரணமா இருப்பார்" என்றார் விரக்தியாக.

இதுபற்றி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``இந்த விவகாரத்துக்கும், அண்ணனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. கோபிகாவை திருமணம் பண்ணிக்கிட்டதை விரும்பாத அவரது உறவினர்கள் இருவரையும் பிரித்திருக்கலாம். இந்த விவகாரத்தில் அண்ணன் பெயரை இழுப்பது தேவையில்லாதது" என்றார்கள்.