வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (12/09/2018)

கடைசி தொடர்பு:12:35 (12/09/2018)

3 பிள்ளைகளை எரித்துக் கொன்று உயிரை மாய்த்த தாய்! திருக்கோவிலூரில் நடந்த கொடுமை

3 பிள்ளைகளை எரித்துக் கொன்று விட்டு தாய் ஒருவர் தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் திருக்கோவிலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 3 பிள்ளைகளை எரித்துக்கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட தனலட்சுமி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த கீழகொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமியின் மகன் இளங்கோவன். இவர் விழுப்புரம் வழுதுரெட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் வியாபாரி ஒருவரிடம் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவருக்கும் தனலட்சுமி (28) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கமலேஷ்வரன் (7), விஷ்ணுபிரியன் (4) மற்றும் ருத்திரன் என்ற 9 மாதக் கைக்குழந்தையும் இருந்தனர். தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார் இளங்கோவன்

இளங்கோவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கும், தனலட்சுமிக்கும் இடையே சிறிது நாள்களாக மனக் கசப்பும், தகராறும் நிலவி வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் தகராறு முற்றியதால் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த 10-ம் தேதி கீழக்கொண்டூரில் உள்ள தனது மாமனார் ராமசாமி வீட்டுக்கு மூன்று குழந்தைகளுடன் வந்திருக்கிறார் தனலட்சுமி. கடந்த இரண்டு நாள்களாக கடுமையான மன உளைச்சலில் தவித்து வந்த தனலட்சுமி, இன்று காலை 7 மணியளவில் தனது மாமனார் ராமசாமியிடம் கடைக்குச் சென்று டீ வாங்கி வருமாறு கூறியிருக்கிறார்.

மாமனாரை கடைக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார் தனலட்சுமி. ஆனால், தனக்குப் பிறகு குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்தாரோ என்னவோ, தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு மூன்று குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தபிறகுதான் வீட்டிற்குள்ளே மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேரும் தீயில் கருகி உயிர் இழந்திருந்தது தெரியவந்தது. உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க