``எஸ்.பி.வேலுமணி சொத்துக் குவித்தது எப்படி?'' தி.மு.க வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் | DMK seeking a probe into graft allegations against Tamil Nadu Minister SP Velumani

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (12/09/2018)

கடைசி தொடர்பு:14:39 (12/09/2018)

``எஸ்.பி.வேலுமணி சொத்துக் குவித்தது எப்படி?'' தி.மு.க வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

``எஸ்.பி.வேலுமணி சொத்துக் குவித்தது எப்படி?'' தி.மு.க வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

ளும்கட்சி அ.தி.மு.கவுக்கு எதிராக தி.மு.க தலைமை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரை அடுத்து, இப்போது தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தி.மு.க. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதை, `அரசியல் காழ்ப்புணர்ச்சி' என்று ஆளும்கட்சி சொல்லி வருகிறது. ஆனால், தி.மு.க தரப்போ, ``உரிய ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகச் சொல்லி வருகிறார்கள். தமிழ்நாடு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மற்றும் கண்காணிப்பு ஆணையருக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கடிதம் எழுதியுள்ளார். அதில், ``அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார். அந்தப் புகாரின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

``* தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் ஆகிய துறைகளின் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். அவர், மாநகராட்சிகளால் ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்படுவதற்கு முன்பு தன்னுடைய பினாமிகளை சில நிறுவனங்களில் இயக்குநர்களாக நியமித்துள்ளார். சென்னை, கோவை, சேலம், திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில், தமிழ்நாடு பொதுப் பணித்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை பொலிவுறு நகரத் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டன. 

* கே.சி.பி. இன்ஜினீயர்கள் பிரைவேட்  லிட், பி.செந்தில் அன்கோ, வர்தன் உள் கட்டமைப்பு, கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, ஆலயம்  அறக்கட்டளை பிரைவேட் லிட், கான்ஸ்ட்ரோமால் குட்ஸ் பிரைவேட்  லிமிடெட், இன்விக்டா மெடி டெக்ட், கே.சி.பி.இன்ஜினீயர்கள் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அந்த நிறுவனங்கள் ஆகும்.

* இந்த நிறுவனங்கள் அனைத்தும் எஸ்.பி.வேலுமணியின் பினாமிகள் (உறவினர்கள் மற்றும் சகாக்கள்) ஆகியோருக்குச் சொந்தமாகவும் அவர்களால் நிர்வகிக்கப்பட்டும் வந்தன. உதாரணமாக, அவர்களின் வருவாய் இரண்டே ஆண்டுகளில் 3,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

* எஸ்.பி.வேலுமணியின் பினாமிகள் இயக்குநர்களாகவும், நிறுவனங்களை நடத்துபவர்களாகவும், சம்பந்தமே இல்லாத ஜூவல்லரி, வரவேற்புத் துறை போன்றவற்றில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியவர்களாகவும், கணக்கில்காட்டப்படாத பணத்தின் மூலம் செயல்பட்டு ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்று வந்தனர். இந்தக் கணக்கில் காட்டாத பணத்தின் மூலம் தொடங்கப்பட்ட நிறுவனங்களால் எஸ்.பி.வேலுமணி சட்ட விரோதமாகவும், எதேச்சதிகாரமாகவும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கும் விஷயத்தில் விதிகளை மீறிச் செயல்பட்டு வந்தார். அதனால், எஸ்.பி.வேலுமணியும், அவருடைய பினாமிகளும் சட்ட விரோதமாகச் சொத்துகளைக் குவித்து வந்தனர்.

சென்னை மாநகராட்சி, வேலுமணி ஊழல் குற்றச்சாட்டு


* உரிய ஒப்பந்தப் புள்ளிகள் பற்றி ஆய்வு நடத்தியதில், முன்அனுபவம் இல்லாமலே இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்கள் சங்க மனுக்களில் குறிப்பிடப்பட்டதற்கு மாறாக ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்றுள்ளன. அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் தேவையற்ற சலுகைகளுடன் ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. 

* சென்னை மாநகராட்சியின் ஐந்து ஒப்பந்தங்கள் எஸ்.பி.வேலுமணியின் பினாமிகள் மட்டுமே கலந்துகொள்ள, அதில் ஒன்று மட்டும் ஏற்கப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் மூலம் வெளியிடப்படும் டெண்டர்களில் அவர் பல்வேறு முறைகேடுகளில் இதுவரை தெரிவித்துள்ளதைப் போல ஈடுபட்டுள்ளார்.

* 2012 ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் ரூ.942 கோடி உபரியாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டு அதுவே ரூ.566 கோடியாகக் குறைந்து விட்டது. அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி ஏற்றவுடன் உபரி ஓரே அடியாகக் குறைந்து, ரூ.2,500 கோடி கடன் வாங்கும் நிலை வந்துள்ளது. தற்போது, சென்னை மாநகராட்சி கடனில் தத்தளிக்கும் அமைப்பாக உள்ளது. அதற்கு எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகம்தான் காரணம். 

* ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படும் பொலிவுறு நகரம் தொடர்பான டெண்டர்கள், தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என்பதால் எஸ்.பி.வேலுமணி தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறார். பிரதமரின் முக்கியத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டம், எஸ்.பி.வேலுமணியின் அமைச்சரக அலுவலகத்தில் லஞ்ச ஊழலில் முறைகேடுகளில் ஊறித் திளைக்கிறது. 

* எஸ்.பி.வேலுமணியும், அவரது பினாமிகளும் அவர்களோடு இணைந்திருப்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் வருமான வரிச் சட்டம், கம்பெனிகள் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், பினாமிகள் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பண மோசடி சட்டம், லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் தண்டிக்கப்படவேண்டும். 

* எஸ்.பி.வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆடிட் (தணிக்கை) செய்வது அவசரமானதாகும். தங்களுக்குத் தொடர்பில்லாத துறையில் அந்நிறுவனங்கள் முறையின்றி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதால் அதன் சேவைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாகப் பெறப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து வேண்டும். எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பினாமிகள், தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்."

இவை, தி.மு.க தரப்பில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக எழுதப்பட்ட கடிதத்தில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்