வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (12/09/2018)

கடைசி தொடர்பு:14:20 (12/09/2018)

`தண்ணி இல்ல; எங்குப் பார்த்தாலும் குப்பைகள்'- காவிரி துலாக்கட்டத்தின் பரிதாப நிலை

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்திருக்கிறது காவிரி துலாக்கட்டம். இது காசிக்கு இணையான புனிதத் தீர்த்தமாகக் கருதப்படுகிறது. கங்கை, யமுனை போன்ற புனித ஆறுகள் கூட இங்கு வந்து நீராடி தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்கின்றன என்பது ஐதீகம். இத்தகைய புனிதமான இடத்தில் சென்ற வருடம் இதே நாளில் (12.9.17) 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் நடைபெற்றது. அப்போது காவிரியில் நீர்வரத்து இல்லாததால் தற்காலிகக் குளம் அமைக்கப்பட்டு பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது. காவிரியில் முதல்வர் நீராட வந்த அன்று மட்டும் மேட்டூரிலிருந்து நீர் புஷ்கரத்துக்காகத் திறந்துவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காவிரி துலாக்கட்டம்


சென்ற வருடம் இதே நாளில் களைக்கட்டிய காவிரி துலாக்கட்டம் தற்போது எப்படி இருக்கிறது என்று சற்று எட்டிப்பார்த்தோம். பெயரில் மட்டும் தான் காவிரி இருந்ததே தவிர, இப்பகுதியில் ஒரு துளி நீர்கூட இல்லை. சென்ற வருடம் புனித நீராடலுக்காகக் கட்டப்பட்ட தற்காலிகக் குளம் ஏதோ பாலைவனப் பகுதி போலக் காட்சியளிக்கிறது. எங்குப் பார்த்தாலும் குப்பைகள்தாம் நிரம்பியுள்ளன. 

இது பற்றி இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் கேட்டபோது, ``காவிரி தண்ணி கடல்ல கலந்து வீணாகுது. வெள்ளம் வருதுனுலாம் சொல்றாங்க. இதுவும் காவிரி பகுதிதான். ஆனா, இங்க மட்டும் தண்ணியத் தொறந்து விடமாட்றாங்க. இங்க போன வருஷம் புஷ்கரம் நடந்தப்போ அதுல நீராட முதல்வர் வந்தாரு. ஆனா இந்த வருஷம் ஒரு துளிதண்ணி கூட வரல. இந்த இடமே வறட்சியாக் கிடக்கு. கொஞ்ச நாள் போன இதையும் ஃபிளாட் போட்டு வித்துடுவாங்க. பணம் மட்டுமே குறிக்கோளா இருக்குறவங்களுக்குப் புனிதம் என்ன, புண்ணியம் என்ன" என்று தனது ஆதங்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். 

இந்தப் பகுதியில் தற்காலிகக் குளம் அமைக்கப்பட்டதன் நோக்கமே காவிரியில் நீர்வரத்து இல்லை என்றாலும், இதில் எப்போதும் போர்வெல் மூலம் நீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராட வழிவகை செய்ய வேண்டும் என்பதே. ஆனால், எந்தவொரு திட்டமும் வகுக்கப்படுவதோடு சரி. நடைமுறைப்படுத்தப் பாடாது என்பதற்குக் காவிரி துலாக்கட்டம் மட்டும் விதிவிலக்கா என்ன. மேலும் இந்த இடம் இரவு நேரங்களில் குடிமகன்களின் பார்களாகவும் மாறி வருகிறது. இவ்வாறு அசுத்தமடைந்து பாழாகி வரும் இந்தத் துலாக்கட்டத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மொத்தத்தில் சென்ற வருடம் புஷ்கரத்துக்கு நேர் எதிராக தற்போதைய காவிரி துலாக்கட்டம் காணப்படுகிறது.