வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (12/09/2018)

கடைசி தொடர்பு:14:40 (12/09/2018)

கிராம சுயாட்சித் திட்டங்களை நிறைவேற்றி அசத்தல்! தூத்துக்குடி மாவட்டத்துக்கு மத்திய அரசு விருது!

கிராம சுயாட்சி இயக்க காலத்தில் மத்திய அரசின் 7 முக்கியத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதன்மை மாவட்டமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார். 

 தூத்துக்குடி மாவட்டத்துக்கு மத்திய அரசு விருது!

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``கிராமப்புற மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், வாழ்வாதார வாய்ப்புகளைப் பெருக்குதல், சுற்றுபுறத் தூய்மையைப் பெருக்குதல் மற்றும் ஊராட்சி அமைப்புகளைப் பயன்படுத்துதல் போன்ற தேசிய முக்கியத்துவம் பெற்ற அரசு நலத்திட்டங்கள் குறித்த கிராமப்புற மக்களின் கருத்துகளைக் கண்டறியும் வகையில் மத்தியரசு, கடந்த 2018, ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை கிராம சுயாட்சி இயக்கத்தினை மாநிலத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தது.

அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிராம சுயாட்சி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 50 கிராமங்கள் கண்டறியப்பட்டு, பிரதான்மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை எரிவாயு இணைப்புகள் வழங்கப்படாத 1,987 வீடுகள் கண்டறியப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, செளபாக்கியா திட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 50 கிராமங்களில் 19,362  எல்.இ.டி., மின்விளக்குகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக்கணக்கு தொடங்காத 10,412 பேர் கண்டறியப்பட்டு, அவர்களது ஊரகப் பகுதியில் உள்ள வங்கிகளில் வங்கிக் கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 12,305 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அரசின் பங்களிப்புடன் கூடிய வங்கிக் கணக்கு மூலமாக காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பீமா சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 15,832 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அரசின் பங்களிப்புடன் கூடிய வங்கிக்கணக்கு மூலமாக விபத்துக்காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திர தனுஷ் இயக்கத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வயதுக்குட்பட்ட 69 குழந்தைகள் மற்றும் 38 கருவுற்ற தாய்மார்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டு, நோய்த்தடுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராம சுயாட்சி இயக்க காலத்தில் மத்தியரசின் 7 முக்கியத் திட்டங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி, விக்யான் பவனில் நடைபெற்ற, கிராம சுயாட்சி இயக்க விழாவில், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார். நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் விருது மற்றும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க